7 வருடங்களுக்கு பின்னர் நிர்பயா பாலியல் பலாத்கார கொலை குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்…

Read Time:4 Minute, 29 Second

சட்ட ரீதியான முறையீடுகள் முடிவுக்கு வந்ததால், நிர்பயா பாலியல் பலாத்கார, கொலை குற்றவாளிகள் 4 பேரும் டெல்லி திகார் சிறையில் இன்று தூக்கிலிடப்பட்டனர்.

டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (வயது 32), பவன் குமார் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் மரண தண்டனை விதித்து டெல்லி விசாரணை நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கிடையே மற்றொரு குற்றவாளியான ராம் சிங் சிறையில் தற்கொலை செய்துக்கொண்டான். மற்றொருவன் சிறுவன் என்பதால் சிறைதண்டனையுடன் விடுவிக்கப்பட்டான். 4 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தன.

2019 இறுதியில் மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கைகள் நகர்ந்த போது இதிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக அவர்கள் 4 பேரும் ஒவ்வொருவராக மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு ஆகியவற்றை மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 3 முறை தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரின் கருணை மனுக்களும் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, டெல்லி சிறைத்துறை தாக்கல் செய்த மனுவை விசாரித்த டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்றம் கடந்த 5-ந் தேதியன்று, குற்றவாளிகள் 4 பேரையும் 20-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலிடுமாறு புதிய மரண வாரண்டை பிறப்பித்தார். இந்த மரண வாரண்டு பிறப்பிக்கப்பட்ட பிறகும், தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி 4 பேர் தரப்பிலும் வக்கீல் ஏ.பி.சிங் டெல்லி கூடுதல் செசன்சு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதற்கிடையே உச்சநீதிமன்றத்தில் குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், குற்றவாளிகளுக்கு இருந்த அனைத்து சட்டரீதியான உரிமைகளும் முடிவடைந்து விட்டன. இதற்கிடையே குற்றவாளிகள் தரப்பில் சர்வதேச கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இதுவரை விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவில்லை. எனவே அவர்களுக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது உறுதியாகியது. திகார் சிறையில் 4 பேரையும் தூக்கில் போடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டது. அதன்படி இன்று காலை 5:30 மணிக்கு 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர்.

7 ஆண்டுகளுக்கு பிறகு குற்றவாளிகள் தூக்கில் போடப்படுவதால் தனது மகளின் ஆன்மா சாந்தி அடையும் என்று நிர்பயாவின் தாயார் கூறி உள்ளார். குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதையடுத்து நிர்பயாவின் தாயார் அளித்த பேட்டியில், நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்துள்ளது. என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்து உள்ளது. எனது நாடு நீதியை பெற்று தந்துள்ளது. இந்தியாவின் மகள்களுக்கான, அவர்களின் நீதிக்கான எங்கள் போராட்டத்தை நாங்கள் தொடருவோம். நீதிக்கான எங்கள் காத்திருப்பு வேதனையாக இருந்தது, ஆனால் இறுதியாக எங்களுக்கு நீதி கிடைத்தது. எனது மகளின் புகைப்படத்தை நான் ஆரத்தழுவி கொண்டேன் எனக் கூறியுள்ளார்.