இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உயர்வு; பயணிகள் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது…

Read Time:2 Minute, 16 Second

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 341 ஆக உயர்ந்து உள்ளது.

இதற்கிடையே உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது. இந்தியாவில் வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக மத்திய அரசு இன்று அமல்படுத்திய மக்கள் ஊரடங்கு பல்வேறு பகுதிகளில் நீட்டிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் மக்கள் ஊரடங்கு நாளை காலை 5 மணி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 75 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை வலுப்படுத்துமாறு மத்திய அரசு மாநில அரசுக்களை கேட்டுக்கொண்டு உள்ளது.

மராட்டிய மாநிலத்தில் அதிகப்பட்சமாக கொரோனா வைரசினால் 74 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அம்மாநிலத்தில் 144 தடைஉத்தரவை மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் நான்கு மாநிலங்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்து உள்ளனர். உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க மாநிலங்கள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

ரெயில் சேவை நிறுத்தம்

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 31-ம் தேதி வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவைகளையும் ரத்து செய்வதாக இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது. சரக்கு ரெயில்கள் மட்டும் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. புறநகர் ரெயில்களும், மெட்ரோ ரெயில்களும் இன்று இரவு வரை இயங்கும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 13 மற்றும் மார்ச் 16 ஆகிய தேதிகளில் ரெயில்களில் பயணித்த பயணிகள் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.