ரெயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்… “சொந்த ஊருக்கு திரும்பாதீர்கள்…!” பிரதமர் மோடி வேண்டுகோள்

Read Time:4 Minute, 59 Second

உலகத்தையே அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் இதுவரை 310 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தொற்றுக்கு 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுக்கள் அதிதீவிரமான நடவடிக்கையை மேற்கொண்டுவருகின்றன. இதற்கு மக்களுடைய முழு ஒத்துழைப்பு அவசியமாக உள்ளது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சிகளின் ஒருபகுதியாக பிரதமா் மோடி இன்று (மாா்ச் 22) ஒருநாள் மக்கள் அனைவரும் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீட்டை வி்ட்டு வெளியே வராமல் மக்கள் சுயஊரடங்கு கடைப்பிடிக்க வேண்டும் என்று கடந்த 19-ம் தேதி வேண்டுகோள் விடுத்தார். அவர் அப்போது, எச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதேவேளையில் தேவையற்ற அச்சத்தை தவிா்க்குமாறும், பதற்றத்தில் மருந்துகள் மற்றும் உணவுப்பொருள்களை வாங்கிக் குவிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதேபோன்று தமிழக அரசும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளது. இந்தியா முழுவதும் மக்கள் ஊரடங்குக்கு பொதுமக்கள் தரப்பிலும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பொதுமக்கள் பலர் வெளியூர்களுக்கு செல்ல ரெயில்களில் முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை கடந்த சில நாட்களாக ரத்து செய்து வந்தனர். சில நாட்களாகவே ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. ஆனால், மக்கள் ஊரடங்கு தொடங்குவதற்கு முந்தைய நேற்றைய நாளில் காலையில் இருந்தே பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ரெயில் நிலையங்களில் குவிந்தனர். இதனால் ரெயில் நிலையங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

ரெயில்களில் பயணம் செய்வதை சில நாட்களுக்கு தவிர்க்குமாறு மத்திய அரசும், தமிழக அரசும் வேண்டுகோள் விடுத்துள்ளது. ரெயில்களில் பயணம் செய்வதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவுகிறது எனவும், எனவே பொது மக்கள் ரெயில் பயணத்தை தவிர்க்க வேண்டும் எனவும் ரெயில்வேயும் கேட்டுக்கொண்டது. ஆனால், பொதுமக்கள் அலட்சியமாக, அதையும் மீறி பயணம் மேற்கொண்டு வருவது தடுப்பு நடவடிக்கைகளை கேள்விக்குறியாக்கிறது.

இதற்கிடையே கொரோனா விவகாரத்தை மிகவும் உன்னிப்பாக கவனித்துவரும் பிரதமர் மோடி அவ்வப்போது சமூக வலைதளங்கள் மூலம் பொதுமக்களுக்கு கோரிக்கைகளை விடுத்து வருகிறார்.

பயணங்களை தவிர்க்கவும்

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், “தயவுசெய்து, நீங்கள் இருக்கும் நகரங்களிலே சில நாட்கள் இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்திக்கிறேன். இதன்மூலம், நாம் அனைவருக்கும் நோய் பரவாமல் தடுக்க முடியும். ரெயில் நிலையங்கள் மற்றும் பஸ் ஸ்டாண்டுகளில் கூட்டமாக கூடுவதன் மூலம் நாம் ஆரோக்கியத்துடன் விளையாடுகிறோம். தயவுசெய்து உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் கவலைப்படுங்கள்; தேவையில்லை என்றால் உங்கள் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் ”என்று கேட்டுக்கொண்டார்.

பிரதமர் மோடி அறிவித்தபடி மக்கள் ஊரடங்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிவிட்டது. அதற்கு முன்னதாக பிரமதர்மோடி டுவிட்டரில் பதிவிட்ட செய்தியில் “இன்னும் சிலநிமிடங்களில் மக்கள் ஊரடங்கு தொடங்கப்போகிறது. இந்த ஊரடங்கில் அனைவரும் பங்கேற்று, நம்முடையை வலிமையை, ஒற்றுமையை வெளிப்படுத்தி, கொரோனா வைரஸை எதிர்த்து போராடி நாம் வெல்ல வேண்டும். கொரோனா வைரஸை எதிர்க்கொள்ள இப்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் எதிர்காலத்தில் உதவியாக இருக்கும். மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் “ எனக் குறிப்பிட்டுள்ளார்.