இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்வு; மாநிலம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை விபரம்:-

Read Time:2 Minute, 14 Second

இந்தியாவில் ஏழு பேரைக் கொன்ற கொடிய கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுக்கள் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் தரவுகளின்படி, புதியதாக 30 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்ட பின்னர், இந்தியாவில் மொத்தமாக வைரசினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 390 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகப்பட்சமாக மராட்டியத்தில் 89 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 52 ஆக உள்ளது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் 41 வெளிநாட்டினரும் மற்றும் இதுவரை பதிவான ஏழு மரணங்கள் அடங்கும். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை இப்போது 359 ஆக உள்ளது. 24 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 27 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. உத்தரபிரதேசத்தில் 25 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானா – 21, ராஜஸ்தான் – 28, அரியானா – 17 (14 வெளிநாட்டினர்), கர்நாடகா – 20, பஞ்சாப் – 13, லடாக் – 13, குஜராத் – 14, ஜம்மு-காஷ்மீர் – 4, தமிழகம் -6, ஆந்திரா -3, உத்தரகண்ட் -3, மேற்கு வங்காளம் – 4, ஒடிசா -2.

டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்பட 80 மாவட்டங்கள் மார்ச் 31 வரையில் கடுமையான கட்டுப்பாட்டில் வைக்கப்படுகிறது. ரெயில்கள், பெருநகரங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்துகள் இன்று முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. பால், காய்கறிகள், மருந்துகள், மளிகை மற்றும் ஏடிஎம்கள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படுகிறது.