இந்தியாவில் 30 மாநிலங்களில் முழுமையான தடை… 548 மாவட்டங்களில் ஊரடங்கு அமல்…

Read Time:3 Minute, 42 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,500-ஐ தாண்டிவிட்டது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பரவுவது அதிகரித்து வருவதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்தியாவில் வைரசுக்கு பலி எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான புதிய நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 468 ஆக அதிகரித்ததுள்ளது.

இதுவரை பார்த்திராத வகையில் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக மத்திய, மாநில அரசுகள் மிகவும் தீவிரமான நடவடிக்கைகளை எடுக்கவும், கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்தன. அதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் முழுதடை அறிவிக்கப்பட்டுவந்தது. மத்திய மந்திரிசபை செயலாளர் ராஜீவ் கவுபா மாநில தலைமை செயலாளர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் சூழ்நிலையை 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும். தேவைப்பட்டால் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்கலாம் என்றும் கட்டுப்பாடுகளை கடுமையாக அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசு டெல்லி, பெங்களூரு, மும்பை, சென்னை, காஞ்சீபுரம், ஈரோடு உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்த பரிந்துரைத்தது. இந்த 80 மாவட்டங்களிலும் வசிப்பவர்கள் பயணம் செய்யவும், நடமாடவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகள் ரெயில்கள், மாநிலங்களுக்கு இடையே செல்லும் பஸ் போக்குவரத்து ஆகியவை 31-ந் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட இந்த பகுதிகளில் கடுமையான தடைகளை விதிக்கவும், இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கவும் மாநில அரசுகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய பத்திரிகை தகவல் துறை தெரிவித்தது.

மத்திய உள்துறை அமைச்சம் வெளியிட்ட அறிக்கையில், நாட்டில் சண்டிகார், டெல்லி, கோவா, ஜம்மு காஷ்மீர், நாகாலாந்து, ராஜஸ்தான், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், லடாக், திரிபுரா, தெலங்கானா, சத்தீஷ்கார், பஞ்சாப், இமாச்சலப்பிரதேசம், மராட்டியம், ஆந்திர பிரதேசம், மேகாலயா, ஜார்கண்ட், பீகார், அருணாச்சலப்பிரதேசம், மணிப்பூர், தமிழகம், கேரளா, அரியானா, டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹாவேலி, கர்நாடகா, அசாம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும் 31-ம் தேதிவரை கடைபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களில் அத்தியாவசிய சேவைகளை தவிர்த்து வேறு எதும் இயங்காது, மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டும் வெளியேவர அனுமதிக்கப்படுவார்கள். இந்தியாவில் சிக்கிம் மற்றும் மிசோரம் ஆகிய இருமாநிலங்களில் மட்டும் எந்தஒரு தடை நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.