இந்தியாவில் மராட்டியம், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரிக்கிறது

Read Time:1 Minute, 53 Second

கொரோனா தொற்றுநோயை கட்டுப்படுத்தவும், சிகிச்சை மருந்தை கண்டுபிடிக்கவும் உலகம் போராடி வரும் நிலையில், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இப்போது கோவிட் -19 எனப்படும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரசினால் உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 16,961 ஆக உயர்ந்துள்ளது. 175 நாடுகளில் 386,350-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவிலும் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் பாதி, கேரளா, மராட்டியம் மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களில் உள்ளன. இந்தியாவில், கடந்த சில நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது, இது நாடு முழுவதும் முழு அடைப்பை அமல்படுத்த செய்துள்ளது. இந்தியாவில் மராட்டியம், கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை தினசரி அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 519 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது. மராட்டியத்தில் கொரோனா வைரசினால் இறந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது, இந்தியாவின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. கேரளாவில் 97 பேருக்கும், மராட்டியத்தில் 107 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.