டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த ஏ.டி.எம்.மிலிருந்தும் அடுத்த 3 மாதங்களுக்கு கட்டணம் இல்லாமல் பணம் எடுக்கலாம்…

Read Time:2 Minute, 47 Second

கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துவரும் நிலையில், எந்தவொரு வங்கியின் ஏ.டி.எம்.மிலிருந்தும் பணத்தை டெபிட் கார்டு மூலம் பணம் எடுத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். ஒரு குறிப்பிட்ட வங்கியின் டெபிட் கார்டு உங்களிடம் இருக்கலாம். ஆனால், கூடுதல் கட்டணம் இல்லாமல் அடுத்த மூன்று மாதங்களுக்கு வேறு எந்த வங்கியின் ஏ.டி.எம்.மிலிருந்தும் பணம் எடுக்க இனி அனுமதிக்கப்படுவீர்கள்.

இதேபோன்று வங்கி கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு கட்டணம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் வர்த்தக பரிவர்த்தனைகளுக்கான வங்கி கட்டணங்களும் குறைக்கப்படுகின்றது. பெரும்பாலான வங்கிகள், தங்கள் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவரிடமிருந்து குறைந்தபட்ச இருப்பு தேவையை (மினிமம் பேலன்ஸ்) கோருகின்றன மற்றும் அதனை வைத்திருக்காத போது அபராதம் வசூலிக்கப்படுகிறது. தற்போது இதற்கு மத்திய அரசு விலக்கு அறிவித்துள்ளது. மார்ச் 10 அன்று எஸ்பிஐ அனைத்து 44.51 கோடி சேமிப்பு வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்கும் முறையை ரத்து செய்தது.

பொதுவாக, வங்கிகள் தங்கள் சொந்த ஏ.டி.எம்.களில் மாதத்திற்கு ஐந்து இலவச பரிவர்த்தனைகளையும், மற்ற வங்கிகளின் ஏடிஎம்களில் மூன்று இலவச பரிவர்த்தனைகளையும் அனுமதிக்கின்றன. இந்த வரம்புகளை நீங்கள் மீறினால், நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டியதிருக்கும். கட்டணங்கள் பரிவர்த்தனையை பொறுத்து ரூ.8-20 வரை மாறுபடும்.

  • 2018-19 நிதியாண்டிற்கான வருமான வரி அறிக்கையை 2020 ஜூன் 30 வரை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய நிதி அமைச்சகம் இன்று நீட்டித்துள்ளது.
  • ஆதார் மற்றும் பான் இணைப்பதற்கான காலக்கெடுவை மார்ச் 31 ஆம் தேதியிலிருந்து ஜூன் 30 வரை நீட்டித்துள்ளது.