கொரோனா வைரஸ்: உலகிற்கு மீண்டும் இந்தியா வழிக்காட்ட வேண்டும் #WHO

Read Time:2 Minute, 53 Second

கொரோனா வைரசை எதிர்த்துப் போராட இந்தியா மிகப்பெரிய திறனை கொண்டுள்ளது எனக் கூறியுள்ள, உலக சுகாதார அமைப்பு, போலியோ மற்றும் அம்மை நோயை இந்தியா எவ்வாறு ஒழித்தது என்பதை உதாரணமாக குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை இந்தியாவில் 500-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் பரவலை எதிர்த்து 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்தியா ஒரு முழுமையான தடையை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, சின்னம்மை மற்றும் போலியோவை ஒழித்த அனுபவம் இருப்பதால், கொரோனா தொற்றுநோயை கையாள்வதில் இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

WHO நிர்வாக இயக்குனர் ஜே. ரியான் பேசுகையில், “கொரோனா வைரஸ் பாதிப்பில் எழுச்சி காணப்படும் நிலையில் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தேவை உள்ளது. இந்தியா மிகவும் அதிகமான மக்கள்தொகை கொண்ட நாடாகும். அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட நாட்டில் வைரஸின் எதிர்காலம் நீண்டதாக இருக்கும் என கருதப்படுகிறது. சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்றுநோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்தை வழிநடத்தியது, எனவே இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது,” எனக் கூறியுள்ளார்.

கொரோனா விவகாரத்தில் எளிதான பதில் கிடையாது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததை போலவே உலகிற்கும் வழியை காண்பிப்பது முக்கியமானது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் இந்தியாவின் விரிவான மற்றும் வலுவான நடவடிக்கையை WHO இன் பிராந்திய அவசரகால இயக்குநர் டாக்டர் ரோடெரிகோ ஆஃப்ரின் பாராட்டி உள்ளார். “பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை அண்மையில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது உட்பட தனிமைப்படுத்தல் மற்றும் சமூக விலகல், ரெயில் சேவைகள், இருமாநிலங்கள் இடையிலான பேருந்து சேவைகள் மற்றும் மெட்ரோ சேவைகள் இடைநீக்கம் என்பது முன்னோடியில்லாத அளவிலான முயற்சியாகும் மற்றும் தொற்றுநோய் பரவாமல் தடுப்பதற்கான நாட்டின் தீர்மானத்தை பிரதிபலிக்கிறது,” எனக் கூறியுள்ளார்.