விதிமுறைகளை மீறும் மக்கள்.! 15 நாள் சுய ஊரடங்கை அறிவிக்க பிரதமர் மோடிக்கு இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் கடிதம்!

Read Time:4 Minute, 27 Second

பிற உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் கொரோனா தொற்று தீவிரமடைந்து வருகிறது. மராட்டியம், டெல்லி, கர்நாடகா, கேரளா, தமிழகம் என பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் நாளுக்கு நாள் புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதற்கிடையே வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஞாயிறு அன்று நாடு முழுவதும் ஒருநாள் மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக பல மாநிலங்கள் மூடப்பட்டு வருகின்றன.

இவ்வாறு கொரோனாவுக்கு எதிரான அரசுகளின் போராட்டம் ஒரு புறம் தீவிரமடைந்து இருக்க, மறு புறம் இந்த விதிமுறைகளை மக்கள் மீறி வருகின்றனர். இது மத்திய-மாநில அரசுகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதுதொடர்பாக டுவிட்டரில் வெளியிட்ட தகவலில், கொரோனாவுக்கு எதிரான ஊரடங்கு, எல்லைகள் மூடல் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பலர் இன்னும் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை. தயவுசெய்து உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பத்தை பாதுகாத்துக் கொள்ளுங்கள். அரசுகளின் அறிவுறுத்தல்களை தீவிரமாக பின்பற்றுங்கள். கொரோனா தடுப்பு விதிமுறைகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யுமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கிடையே வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு கேட்டுக்கொள்ளப்பட்டவர்கள் அதனைமீறி வெள்ளியே வரும் சம்பவங்களும் தெரியவந்து உள்ளது. மக்கள் நலனுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும். சீனா மற்றும் இத்தாலியில் கொரோனா வைரஸ் இருப்பது தெரியாமல் வெளியே சுற்றியவர்களால்தான் அதிக பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோன்ற தவறை நாமும் செய்ய வேண்டாம். அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்…

எச்சரிக்கை

கொரோனா வைரஸ் வேகமெடுத்துவரும் நிலையில் இந்திய நுண்ணுயிரியல் மருத்துவர்கள் சங்கம் (Microbiologists Society India) பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், தொற்று நோயான கொரோனாவை கட்டுப்படுத்த நீங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளை நாங்கள் பாராட்டுகிறோம். அதேநேரத்தில் மக்கள் சுய ஊரடங்கை இன்னும் 14 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். அப்படி செய்தால்தான் கொரோனா பரவல் சங்கிலியை நம்மால் உடைக்க முடியும். 14 நாட்கள் என்பது கொரோனா வைரஸ் அதிகபட்சமாக உயிர் வாழும் நாள் என்று கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, 14 நாட்கள் சுயஊரடங்கை நடத்துவதன் மூலம் நிச்சயமாக கொரோனாவை இந்தியாவை விட்டு விரட்ட முடியும் என்று நம்புகிறோம்.

இதனை செய்யாவிட்டாலும், சுய ஊரடங்கை முக்கியமாக எடுத்து கொள்ளாவிட்டாலும் வரும் ஏப்ரல் மாத இறுதி வாரத்தில் இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா அறிகுறியுடன் மக்கள் நிரம்பி வழிவார்கள். எனவே, நாங்கள் இங்கு குறிப்பிட்டவற்றை நீங்கள் கவனத்தில் கொண்டு, நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.