38வது மாவட்டமாக உருவாகிறது ‘மயிலாடுதுறை’.. முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

Read Time:1 Minute, 44 Second

நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

கடந்த 8-ம் தேதி நாகை ஒன்றியம் ஒரத்தூர் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக அடிக்கல் நாட்டு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாகை மாவட்டத்திலிருந்து பிரித்து மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அமைப்பதற்கான பரிசீலனை நடைபெற்று வருகிறது என கூறினார்.

முன்னதாக மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி மக்கள் சார்பாக மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று கொரோனா நிவாரணங்களை அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாகப்பட்டினம் மாவட்டம் 2 ஆக பிரித்து மயிலாடுதுறை தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்தார். மயிலாடுத்துறை தனி மாவட்டமாக உதயமாகும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 5 மாவட்டங்கள் சேர்த்து மொத்தம் 37 மாவட்டங்கள் உள்ளன. தற்போது 38வது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகிறது.