இந்தியாவில் நள்ளிரவு முதல் உள்நாட்டு விமான சேவை ரத்து

Read Time:1 Minute, 54 Second

சீனாவில் உருவாகி உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் பல்வேறு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.

வெளிநாடுகளில் இருந்து வருவோர் மூலம் நோய் பரவலை தடுக்கும் வகையில் இந்தியா வரும் சர்வதேச விமானங்களுக்கு மத்திய அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலும் வைரஸ் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக மக்கள் பயணம் செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கில் உள்நாட்டு விமான சேவையையும் ரத்துசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று (மார்ச் -24) நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு விமான சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு 11.59 மணிக்குள் தனது சேருமிடத்தை அடையும் விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் எனவும், அதன்பின்னர் எந்த விமானங்களும் இயக்கப்படாது என சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்து உள்ளது. அனைத்து சரக்கு விமானங்களும் வழக்கம்போல இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விதமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சரக்கு விமானங்கள் அனைத்தும் இயக்கப்படும் என விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையமும் தனது டுவிட்டர் பக்கத்தில் தெளிவுபடுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.