கொரோனா வைரஸ் பரவல்: புகைபிடிப்பவர்கள் அதிக ஆபத்தில் உள்ளார்களா?

Read Time:5 Minute, 22 Second

உலக சுகாதார அமைப்பு (WHO) கொரோனா வைரஸ் வெடிப்பு குறித்த அறிவிப்பில், புகைபிடித்தல் என்பது மக்கள் செய்யக்கூடாத ஒரு விஷயம் என்று கூறுகிறது. நாவல் கொரோனா வைரஸிலிருந்து புகைபிடிப்பவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளதா? என்ற கேள்விக்கு சுகாதார நிபுணர்கள் தரப்பில் ஆம் என்ற பதில் தெரிவிக்கப்படுகிறது.

புகைப்பிடிப்பவர்களில் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய் ஏற்கனவே பல்வேறு நிலைகளில் பாதிப்பை சந்தித்து இருக்கும், இதனை கொரோனா வைரஸ் கடுமையாக பாதிக்கும். மற்றும் கடுமையான சந்தர்ப்பங்களில் சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகளுக்கு வழிவகுக்கிறது. “ஏற்கனவே பாதிப்பை எதிர்நோக்கியிருக்கும் சுவாச அமைப்பை தாக்கும் புதிய தொற்று மிகவும் ஆபத்தானது, ” என்கிறார்கள் நிபுணர்கள். புகைபிடிப்பவர்கள் அதிலிருந்து வெளியேற இதுவே சிறந்த நேரம் என்று பரிந்துரைக்கும் அவர்கள், தொற்றுநோய் கட்டுப்படுத்தப்படும் வரையிலாவது குறைந்தபட்சம் புகைப்பதை நிறுத்தவும் எனக் கேட்டுக்கொள்கிறார்கள்.

“நான் (எப்போதாவது புகைப்பிடிப்பவர்கள்) ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு சிகரெட்டுகளை மட்டுமே புகைப்பதாக அல்லது சில நாட்களுக்குப் பிறகுதான் புகைப்பேன் எனக் கூறமுடியாது. உங்கள் சுவாச மண்டலத்தை சேதப்படுத்தும் ஒரு விஷயத்திற்கு நீங்கள் உள்ளாகிறீர்கள் என்பது தான் உண்மை. சங்கிலி தொடர் போன்று புகைப்பவர்கள் எப்படியாவது உளவியல் ரீதியாக புகைப்பதை நம்பியிருக்கிறார்கள் மற்றும் ஒரு சிகரெட்டை ஒன்றன்பின் ஒன்றாக புகைக்கிறார்கள். ஆனால் கொரோனா வைரசின் ஆபத்து சங்கிலி தொடர்ந்து புகைப்பவர்களுக்கும், அவ்வப்போது புகைப்பிடிப்பவர்களுக்கு சமமாக சுற்றி நிற்கிறது.

கொரோனா வைரசால் புகையிலை புகைப்பவர்களை விட சிகரெட் புகைப்பவர்களுக்கு அதிக ஆபத்து உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. புகையிலை வாய்வழி ஆரோக்கியத்திற்கு அதிக சேதத்தை ஏற்படுத்துகிறது, அதே நேரத்தில் சிகரெட்டுகள் உங்கள் நுரையீரலை சேதப்படுத்துகிறது. கொரோனா வைரஸ் புதிய நோய் மற்றும் வைரஸ் தொடர்பாக இன்னும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ்களின் குடும்பம் மனிதர்களில் சுவாச செயல்பாட்டை தாக்குகிறது என்பது உண்மையாகும். புகைப்பவர்களுக்கு ஆபத்து என்பது உள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியன் சுகாதாரத் துறையின் ஆதரவோடு புற்றுநோய் கவுன்சில் விக்டோரியாவால் க்விட் என்ற திட்டம் நடத்தப்படுகிறது. நீங்கள் முன்பு புகைபிடித்திருந்தால், இப்போது அந்த பழக்கத்திலிருந்து வெளியேறிவிட்டால், கடுமையான சிக்கல்களுக்கான ஆபத்து உங்களுக்கு குறைவாக இருக்கலாம் (நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால்) … புகைப்பிடிப்பதை நிறுத்துவது சில மாதங்களுக்குள் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்பது நன்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் உடல்நலத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய மிகச் சிறந்த விஷயம் புகைப்பிடிப்பதை நிறுத்துவதாகும் என விக்டோரியா கேன்ஸர் கவுன்சில் கூறுகிறது. ஒரு நெருக்கடியின் போது சோகம், மன அழுத்தம், குழப்பம், பயம் அல்லது கோபம் ஏற்படுவது இயல்பு என்பதை WHO ஒப்புக்கொள்கிறது, ஆனால் ஒருவரின் உணர்ச்சிகளை சமாளிக்க புகைபிடித்தல், ஆல்கஹால் அல்லது பிற மருந்துகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்துகிறது. நீங்கள் இவற்றை அதிகமாக உணர்ந்தால், ஒரு சுகாதார பணியாளர் அல்லது ஆலோசகருடன் பேசுங்கள் என்று கேட்டுக்கொள்கிறது.

தொற்றுநோய் கட்டுப்பாட்டில் இருக்கும் வரை, ஒரு நாளைக்கு ஒரு சிகரெட் கூட ஒரு விருப்பமாக இருக்கக்கூடாது என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். “புகைபிடிப்பவர்கள் உடனடியாக புகைபிடிப்பதை நிறுத்த வேண்டும், குறைந்தது தொற்றுநோய் முடியும் வரையிலாவது; உண்மையில், புகைபிடிப்பதை முற்றிலுமாக விட்டுவிடுவதற்கு கொரோனா வைரஸ் வெடித்ததை விடவும் சிறந்த நேரம் இருக்க முடியாது,” என்கிறார்கள் நிபுணர்கள்.