சென்னையில் ஒரேநாளில் கொரோனா வைசால் 6 பேர் பாதிப்பு, மதுரையில் ஒருவர் உயிரிழப்பு

Read Time:5 Minute, 48 Second

தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, 119 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் வரையில் 12 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில். நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசுகையில், கலிபோர்னியாவில் இருந்து வந்த போரூரை சேர்ந்த 74 வயது நபருக்கும், லண்டன் மற்றும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டு வந்த புரசைவாக்கத்தை சேர்ந்த 52 வயது பெண்ணுக்கும், சுவிட்சர்லாந்தில் இருந்து வந்த கீழ்க்கட்டளையை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கும், நியூசிலாந்தில் இருந்து வந்த 65 வயது நபருக்கும், சைதாப்பேட்டையை சேர்ந்த 55 வயது பெண், லண்டனில் இருந்து வந்த 25 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது என்றார்.

கலிபோர்னியாவில் இருந்து வந்தவரும், அமெரிக்கா, லண்டனில் இருந்து வந்த பெண்ணும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், கீழ்க்கட்டளை மற்றும் சைதாப்பேட்டையை சேர்ந்த பெண்கள் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியிலும், 25 வயது வாலிபர் ராஜீவ்காந்தி மருத்துவமனையிலும் 65 வயது நபர் தனியார் மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு ஆளானோர் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவையில்லாமல் முகக்கவசம் அணிய வேண்டியது கிடையாது. தமிழக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதமர் மோடியும் 21 நாட்கள் முழு ஊரடங்கை நாடு முழுவதும் அறிவித்து உள்ளார். மக்கள் நலனுக்காக இதுபோன்ற அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என விஜயபாஸ்கர் கூறியுள்ளார். இத்தாலி உள்ளிட்ட பாதிக்கப்பட்ட நாடுகளில் 3-வது மற்றும் 4-வது 15 நாட்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 முதல் 20 மடங்கு வரையிலும் உயர்ந்திருக்கிறது. இதுபோன்ற தமிழகத்துக்கு வந்துவிடக்கூடாது என்பதில் தமிழக அரசு மிக கவனமாக இருக்கிறது. முழு ஊரடங்கு உத்தரவை தமிழக மக்கள் கடுமையாக பின்பற்றவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

மதுரையில் உயிரிழப்பு

மதுரையில் நீரிழிவு நோய் மற்றும் ரத்த அழுத்தம் அதிகம் இருந்தவர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கும் ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கொரோனா வைரஸ் வயதானவர்களை அதிகம் பாதிக்கும். நீரிழிவு நோய், சுவாசக்கோளாறுகள், கிட்னி மாற்று சிகிச்சை, கிட்னி பாதிப்பில் உள்ளவர்கள் போன்றவர்கள் நோய்வாய்ப்பட்டால் கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும். இந்நிலையில் அவர் நீரிழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்தும் நேற்று மாலை முதல் அவரது உடல் சிகிச்சைகளை ஏற்க மறுக்கிறது. தீவிரமாக அவரது உயிரைக் காக்க மருத்துவர்கள் போராடினார்கள். இதனை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அதிகாலை 3 மணி அளவில் மதுரை நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டரில் தெரிவித்து உள்ளார். வெளிநாட்டிலிருந்து வராமல் உள்ளூரில் மதுரை அண்ணா நகரில் வசித்த அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்று அனைவரும் கேள்வியை எழுப்பியிருந்தனர். இதற்கு அமைச்சர் பதில் அளித்து உள்ளார்.

தாய்லாந்திலிருந்து கொரோனா வைரஸ் தொற்றுடன் வந்துள்ள நபர்களுடன் மதுரை நபர் பழகியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவருடன் தொடர்பிலிருந்த மற்றவர்களையும் தனிமைப்படுத்திவிட்டோம். எந்த தொடர்பும் இல்லாத ஒருவருக்கு திடீரென வைரஸ் தொற்று ஏற்பட்டது என பீதியடைய வேண்டாம் என்று விஜயபாஸ்கர் தெரிவித்திருந்தார்.