கொரோனா வைரஸ் பரவல்: நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு விபரம்

Read Time:4 Minute, 32 Second

உலகம் முழுவதும் மக்களின் உயிரை வேட்டையாடிவரும் கொரோனா வைரசின் பாதிப்பு இந்தியாவிலும் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று இரவு நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

பிரதமர் மோடி பேசுகையில், கொரோனா வைரஸ் பிரச்சினை தொடர்பாக மீண்டும் உங்களுடன் பேச வந்துள்ளேன். கடந்த 22-ம் தேதி கடைப் பிடிக்கப்பட்ட மக்கள் ஊரடங்கு வெற்றி பெற்றது.

இந்த வெற்றியில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் பங்கு இருக்கிறது. நீங்கள் எல்லோருமே பாராட்டுக்கு உரியவர்கள். காட்டுத்தீ போல் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ், பல வலிமையான நாடுகளையே செய்வதறியாமல் திகைக்க வைத்திருக்கிறது. அந்த நாடுகள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்தும் சவால்கள் அதிகரித்து வருகின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த தனித்து இருப்பது மட்டுமே தீர்வு என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

தனித்து இருத்தல் என்பது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் கிடையாது, ஒவ்வொரு குடிமகனுக்கும்தான். ஏன், பிரதமருக்கு கூட பொருந்தும். தனித்து இருப்பதை நாம் அலட்சியப்படுத்தினால், அதற்கு இந்தியா கடுமையான விலையை கொடுக்க வேண்டியதிருக்கும். ஆகவே, இன்று (நேற்று) நள்ளிரவு 12 மணி முதல்,நாடு முழுவதும் முழுமையான ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுகிறது. இது, மக்கள் ஊரடங்கைவிட கடுமையானதாக இருக்கும்.

இந்த அறிவிப்பினால் நிதி இழப்பை சந்திக்க வேண்டி இருக்கலாம். ஆனால், மக்களின் பாதுகாப்புக்கு இது முக்கியமானது. நாடுதழுவிய ஊரடங்கு, 21 நாட்களுக்கு அமலில் இருக்கும். வீட்டை விட்டு ஒரு அடி எடுத்து வைத்தால் கூட கொரோனா வைரஸ் உங்கள் வீட்டுக்குள் நுழைய வழி கிடைத்துவிடும். ஆகவே, வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று நாட்டு மக்களை கைகூப்பி கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறினார். அப்போது கொரோனா என்றால், யாரும் சாலைக்கு வரக்கூடாது என்று அர்த்தம் என்று எழுதப்பட்ட பதாகையை காட்டினார்.

இந்த 21 நாள் ஊரடங்கை பின்பற்றாவிட்டால், நாம் 21 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளப்படுவோம் என எச்சரிக்கையை விடுத்தார். இது, பொறுமையையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்க வேண்டிய நேரம். கட்டுப்பாடாக இல்லாவிட்டால், பேராபத்து ஏற்பட்டுவிடும். நமது பாதுகாப்புக்காக தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றும் நபர்களை நினைத்து பாருங்கள் என்று கைகூப்பி உங்களை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க மத்திய, மாநில அரசுகள் எல்லா நடவடிக்கைகளும் எடுத்து வருகின்றன. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான மருத்துவ வசதிகளை வலுப்படுத்த மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது. சுகாதார பணிகளுக்கு முதல் முன்னுரிமை அளிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் கேட்டுக்கொள்கிறேன். வதந்திகளையும், மூட நம்பிக்கைகளையும் நம்பாதீர்கள்.

மருத்துவர்களை கலந்தாலோசிக்காமல், நீங்களாகவே எந்த மருந்தையும் சாப்பிடாதீர்கள். உங்களையும், உங்கள் குடும்பத்தையும் பத்திரமாக பாதுகாத்து கொள்ளுங்கள். இந்த சவாலில் நாம் வெற்றி பெறுவோம் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது என்று பிரதமர் மோடி பேசினார்.