கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது ஏன்?

Read Time:4 Minute, 51 Second

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை எதிா்காலத்தில் லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ளும் அதிகாரத்தை பெறும் வகையில் மத்திய அரசு திங்கள்கிழமை சட்டத்திருத்தம் கொண்டுவந்துள்ளது.

இதற்காக நிதி சட்டத்தின் 8-வது பட்டியலில் திருத்தம் கொண்டுவரும் வகையில், ‘நிதி மசோதா 2020’ஐ மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தாா். அந்த மசோதா விவாதங்களின்றி மக்களவையில் நிறைவேறியது. எனவே இனி மத்திய அரசு வரும் காலத்தில் நினைத்த நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.8 வரை உயா்த்திக்கொள்ள முடியும். இந்த சட்டத்திருத்தத்தின்படி பெட்ரோல், டீசல் மீதான சிறப்பு கலால் வரிக்கான உச்ச வரம்பு முறையே ரூ.18 மற்றும் ரூ.12ஆக உயா்த்தப்பட்டு உள்ளது.

முன்னதாக இந்த உச்ச வரம்பானது பெட்ரோலுக்கு ரூ.10-ஆகவும், டீசலுக்கு ரூ.4-ஆகவும் இருந்தது. சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டாலும், தற்போதைய நிலையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியில் தற்போது மாற்றம் ஏதும் செய்யப்படாது என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். முன்னதாக மத்திய அரசு தனது ஆண்டு வருவாயில் ரூ.39,000 கோடி அதிகரிக்கும் வகையில், கடந்த 14-ஆம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.3 உயா்த்தி நடவடிக்கை மேற்கொண்டது.

இந்த கலால் வரி உயா்வில் சிறப்பு கலால் வரி ரூ.2-ம், சாலை மற்றும் அடிப்படை கட்டமைப்பு வரி ரூ.1-ம் அடங்கும். இந்த நடவடிக்கையால் பெட்ரோல், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு எட்டப்பட்டது. அப்போது, லிட்டா் பெட்ரோலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.10 ஆகவும், டீசலில் கலால் வரிக்கான உச்ச வரம்பு ரூ.4 ஆகவும் இருந்தது. உயர்வுக்குப் பிறகு, பெட்ரோல் மீதான மொத்த கலால் வரி லிட்டருக்கு ரூ. 22.98 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ .188.83 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதையடுத்து தற்போது பெட்ரோல், டீசல் மீதான கலால் வரிக்கான உச்ச வரம்பை அதிகரித்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

கலால் வரியின் ஒவ்வொரு ரூபாய் உயர்வுவின் மூலம் ஆண்டுக்கு சுமார் 13,000-14,000 கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலைகள் சரிவு உடனடியாக நுகர்வோர் மீது சுமையை செலுத்தாமல் இந்த பொறுப்புக்கள் கணிசமாக உயர்த்த உதவுகிறது. ஆனால் கொரோனா வைரஸை அடுத்து கிட்டத்தட்ட நாடு முழுவதும் முழு அடைப்பு நிலவுவதால் எரிபொருட்களுக்கான தேவை மந்தநிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிறுவனங்கள், ரெயில்வே, லாரிகள் மற்றும் பயணிகள் கார்கள் சாலைகளில் இருந்து வெளியேறும்போது, பெட்ரோல், டீசல் மற்றும் ஏடிஎஃப் (விமான எரிபொருள்) நுகர்வு வெகுவாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இறுக்கமான நிதி நிலைமையை கருத்தில் கொண்டு வருவாயை உயர்த்துவதற்காக பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரித்து வருகிறது. உலகளாவிய கச்சா எண்ணெய் விலையில் சரிவு, உலகளாவிய பொருளாதார மந்தநிலையுடன், வளர்ச்சியை ஆதரிப்பதற்காக வருவாயை உயர்த்துவதற்கான வழிகளை தேடுமாறு அரசாங்கத்தை கட்டாயப்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக முக்கிய நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்துகின்றன, நிதி ஊக்கத்தை அதிகரிக்க தொழில்துறை தரப்பில் அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

முன்னதாக, எண்ணெய் விநியோகத்தை குறைக்க ரஷ்யா மறுத்துவிட்டதை அடுத்து, எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கப்போவதாகவ் சவூதி அரேபியா அறிவித்ததால் விலை சரிவை ஏற்பட்டது. இது பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளுக்கு பலனாக அமைந்தது.