கொரோனா வைரசை எதிர்த்து போராட தன்னார்வ மருத்துவர்களை நாடுகிறது மத்திய அரசு!

Read Time:3 Minute, 46 Second

நிதி ஆயோக் தனது இணையதளத்தில் ஓய்வுபெற்ற அரசு மருத்துவர்கள், ஆயுதப்படை மருத்துவ பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் முன்வந்து தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கான முயற்சிகளில் சேருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது மற்றும் உலகம் முழுவதும் 21,000-க்கும் மேற்பட்ட உயிர்களை பறித்த கொரோனா வைரஸ் வெடிப்பை எதிர்த்து போராட தன்னார்வ மருத்துவர்களுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்து உள்ளது.

புதன்கிழமை மத்திய அரசின் நிதிஆயோக்கின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஓய்வுபெற்ற அரசு, ஆயுதப்படை மருத்துவ பணியாளர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவர்கள் முன்வந்து கொடிய வைரஸை எதிர்த்து போராடுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளில் சேருமாறு வேண்டுகோள் விடுத்ததுள்ளது.

கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் பங்களிப்பு அளிக விரும்புவோர் மற்றும் நாட்டிற்கு சேவை செய்வதற்கான இந்த மகத்தான பணியில் ஒரு பகுதியாக இருக்க விரும்புவோர் நிதி ஆயோக்கின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட இணைப்பில் தங்களை பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் பொது சுகாதார மையம் மற்றும் பயிற்சி மருத்துவமனைகளில் தங்கள் சேவைகளை வழங்குவதற்கு தகுதியுள்ள மற்றும் தயாராக இருக்கும் தன்னார்வ மருத்துவர்களை இந்திய அரசு நாடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற மருத்துவர்கள தேவைப்படும் இந்நேரத்தில் உதவிக்கு முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் அதிக எண்ணிக்கையிலானோரை பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளதால், இந்தியாவின் பொது சுகாதார மையங்கள் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகளை கவனித்துக்கொள்வதற்கு மிகப்பெரிய சுமைகளை எதிர்கொள்ளும் என்று நிதிஆயோக் கூறியுள்ளது.

இந்தியா COVID-19 கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பல பகுதிகளையும் பாதிக்கும் வகையில் முன்னோடியில்லாத வகையில் பொது சுகாதார அவசரநிலையை எதிர்கொள்கிறது. அனைத்து குடிமக்களின் ஈடுபாட்டுடன் நெருக்கடியை எதிர்த்துப் போராட மத்திய மற்றும் மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

“இந்த பெரும் சுமையை பொது சுகாதார மையங்களில் இருக்கும் மருத்துவர்கள் சந்திக்கக்கூடாது. நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் மருத்துவ சேவைகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் அதிகரித்து வருகின்றன. கூடுதலாக கொரோனா வைரஸ் ரெயில் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.