உணவுப் பொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்று வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை

Read Time:1 Minute, 52 Second

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று யாராவது வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை தொடர்பாக நாடு முழுவதும் வதந்திகள் கிளம்புவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இது போன்ற வதந்திகளால் ஏற்படும் அச்சத்தை நீக்கி மக்கள் அனைவரும் அமைதி மற்றும் சமாதானத்தை கடைபிடிக்கும் வகையிலும், ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் 21 நாட்களிலும் உணவு, மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு நாடு முழுவதும் எந்தவிதமான தட்டுப்பாடும் இருக்காது என்று அவர்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை வேண்டும். வதந்திகளை பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் மற்றும் டி.ஜி.பி.க்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். இந்த கடிதத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.