அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம், 1000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பு!

Read Time:2 Minute, 45 Second

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருகிறது. கொரோனா வைரஸ் தோன்றிய சீனாவையும், அது கோர முகத்தை காட்டி வருகிற இத்தாலியையும் தொடர்ந்து அமெரிக்காவிலும் ருத்ர தாண்டவமாடி வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்கள் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அமெரிக்காவில் 70,000 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்து இருக்கிறது. 1000-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் கொரோனா வைரஸ் புல்லட் ரெயில் வேகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது என்று சொல்லி அம்மாகாணத்தின் கவர்னர் ஆண்ட்ரூ கியூமோதான் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறார். 3 நாளுக்கு ஒரு முறை கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை நியூயார்க்கில் இரு மடங்காக அதிகரித்து வருகிறது. நியூயார்க்கில் கொரோனா நோயாளிகளை எப்படி சமாளிக்கப்போகிறார்கள்? படுக்கை வசதிகளுடன் கூடிய ஆஸ்பத்திரி உண்டா என்றெல்லாம் எல்லோருக்கும் கவலை எழுந்திருக்கிறது.

இதற்கிடையே அமெரிக்காவின் தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ், டிரம்ப் நிர்வாகத்துக்கு ஒரு கோரிக்கையை முன் வைத்திருக்கிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு இந்தியாவில் 21 நாட்கள் முழுமையான ஊரடங்கை அறிவித்து உள்ளது. பிற உலக நாடுகளும் இதே போன்று ஊடரங்கு நடவடிக்கைகளை எடுத்து இருக்கின்றன கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு இதே போன்ற நடவடிக்கையை, அதாவது அமெரிக்காவிலும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று தி நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கேட்டுக்கொண்டுள்ளது.

ஆனால், டொனால்டு டிரம்ப், அமெரிக்காவை முழுமையாக முடக்கி, ஊரடங்கு நடவடிக்கை எடுக்க முடியாது, பொருளாதாரத்தில் எப்போதும் முதல் இடத்தில் இருக்கிற ஒரு நாட்டில் அதை செய்ய முடியாது. அது மேலும் பிரச்சினையை ஏற்படுத்தி விடும். கொரோனா வைரசுக்காக ஒரு முடக்கத்தை அறிவித்தால் அது கொரோனா வைரசை விட மோசமாகப்போய்விடும் எனக் கூறுகிறார்.