ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குள் கொரோனா நோயாளிகளை வலுக்கட்டாயமாக அனுப்பும் பாகிஸ்தான் ராணுவம்!

Read Time:6 Minute, 10 Second

பாகிஸ்தான் ராணுவம் அந்நாட்டின் பஞ்சாப் மாகாணத்திலிருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தான் ஆகிய பிராந்தியங்களுக்கு கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களை வலுக்கட்டாயமாக அனுப்புகிறது என தகவல் வெளியாகியுள்ளது. அங்கு உள்ளூர்வாசிகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் பாகிஸ்தான் ராணுவம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரை அங்கு அடாவடியாக அனுப்பிவருகிறது.

பாகிஸ்தானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட மக்களை தனிமைப்படுத்துவதற்காக மிர்பூர் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிற முக்கிய நகரங்களில் சிறப்பு மையங்களை அமைத்துள்ளது. ராணுவ மையங்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் குடியிருக்கும் பகுதிகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்ட யாரையும் பிரவேசிக்க இடமளிக்க கூடாது என அந்நாட்டு ராணுவம் கடுமையான உத்தரவினை பிறப்பித்து உள்ளது.

இதன் விளைவாக, மிர்பூர் நகரம் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானின் பிற பகுதிகளுக்கு பூட்டப்பட்ட டெம்போக்களில் ஏராளமான நோயாளிகள் நகர்த்தப்படுகிறார்கள். ஆக்கிரமிப்பு காஷ்மீர் உள்பட இப்பகுதியில் ஏற்கனவே உள்கட்டமைப்பு மற்றும் பயிற்சி பெற்ற மருத்துவ ஊழியர்கள் இல்லை. இந்நிலையில் பாகிஸ்தானில் இருந்து கோவிட் -19 கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைப்பதற்கு எதிராக உள்ளூர்வாசிகள் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் முழு பிராந்தியத்தையும் பிடிக்கும் என்று அப்பகுதி மக்கள் அஞ்சுகிறார்கள் மற்றும் பழங்குடி காஷ்மீர் மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது எனவும் பயப்படுகிறர்கள். இருப்பினும், பாகிஸ்தான் ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இதைப்பற்றி கவலைப்படவில்லை. ஏனெனில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பால்டிஸ்தானுக்கு பாகிஸ்தானில் அரசியல் முக்கியத்துவம் கிடையாது. குறிப்பாக பஞ்சாப் மாகாணத்துடன் ஒப்பிடும்போதும், இப்பகுதிகள் ஒரு பொருட்டாகவே பார்க்கப்படுவது கிடையாது.

ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முசாபராபாத்தில் வசிப்பவர்கள் தங்கள் பிராந்தியத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்படுவார்கள் என்று பயப்படுகிறார்கள், மேலும் இந்த பகுதிக்கு சிறு வியாதிகளை கூட சமாளிக்க சுகாதார வசதிகள் இல்லை என்ற மோசமான சூழ்நிலையே சூழ்ந்துள்ளது.

பாகிஸ்தான் ராணுவம் பாகிஸ்தான் மாகாணமான பஞ்சாபை பற்றி மட்டுமே நினைக்கிறது என்று உள்ளூர் மக்கள் கவலை தெரிவிக்கிறார்கள். முசாபராபாத்தின் பரபரப்பான நகரப்பகுதியிலுள்ள வணிகர் ஜாபர் இஸ்மாயில் கூறுகையில், பஞ்சாப் முழுவதிலும் இருந்து முசாபராபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொரோனா வைரஸ் நோயாளிகள் கொண்டுவரப்படுவதை நாங்கள் பார்த்து வருகிறோம், பாகிஸ்தான் ராணுவத்தால் காஷ்மீர் மக்களுக்கு செய்யப்படும் இந்த சமீபத்திய துரோகம் குறித்து நாங்கள் மிகவும் பயப்படுகிறோம். பாகிஸ்தான் ராணுவம் பஞ்சாபை பற்றி மட்டுமே சிந்திக்கிறது, அவர்கள், பஞ்சாப்பை இந்த கொரோனா வைரஸிலிருந்து விடுவிக்க விரும்புகிறார்கள். அவர்கள் காஷ்மீர் மற்றும் கில்கிட்டை பாகிஸ்தானின் குப்பை தொட்டியாக கருதுகின்றனர் என கவலையுடன் கூறியுள்ளார்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் அரசியல் ஆர்வலர் டாக்டர் அம்ஜத் அயூப் மிர்சா பேசுகையில் “ஒருபுறம் நாங்கள் கொரோனா வைரசிலிருந்து பாதுகாத்துக்கொள்ள சமூக விலகலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம், மறுபுறம் பாகிஸ்தான் அரசாங்கம் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை அமைப்பதை எதிர்த்து மக்களை ஒன்று திரட்டி ஆர்ப்பாட்டம் செய்ய கட்டாயப்படுத்துகிறது” என்று கூறியுள்ளார். “பாகிஸ்தானில் ஆளுகையை மேற்கொள்ள யாரும் கிடையாது. அதனால்தான் அரசாங்கத்தில் இருப்பவர்கள் முழு நாட்டையும் ராணுவத்திடம் ஒப்படைத்து உள்ளனர். ராணுவம் அதன் நலன்களுக்கு ஏற்ப அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது” என குற்றம் சாட்டியுள்ளார்.

பாகிஸ்தானில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1286 ஆக உயர்ந்துள்ளது. நாட்டின் மிக மோசமாக சிந்து மற்றும் பஞ்சாப் மாகாணங்களில் இருந்து 400 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் கில்கிட் பகுதியில் 93 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என அங்கிருந்து வெளியாகும் டான் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.