மதுரையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் பாதிப்பு 38 ஆக உயர்வு

Read Time:2 Minute, 39 Second

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க 12 ஆயிரத்து 955 படுக்கை வசதி கொண்ட தனிமைப்படுத்தப்பட்ட சிறப்பு வார்டுகள் தயார் நிலையில் உள்ளன.

தமிழகம் முழுவதும் 277 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 15 ஆயிரத்து 629 பேர் வீட்டு காண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர். வியாழன் வரையில் தமிழகத்தில் 29 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த நபரின் குடும்பத்தினர் 2 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெருந்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய்லாந்தை சேர்ந்தவர்களுடன் இருந்த 42 வயது மற்றும் 46 வயது ஆண்கள் 2 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 23 வயது நபரும், சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 39 வயது நபரும், சென்னை பம்மல் பகுதியை சேர்ந்த 73 வயது முதியவரும், சென்னையை சேர்ந்த 25 வயது பெண் அரியலூர் அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்தோனேசியாவில் இருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 61 வயது நபருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

மாவட்டம் வாரியாக:-

சென்னை-18 (2 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்)
ஈரோடு – 5
மதுரை – 3(ஒருவர் மரணம் உள்பட)
கோவை – 1
திருநெல்வேலி – 1
சேலம் -6
திருப்பூர் -1
வேலூர் – 1
திருச்சி -1
அரியலூர் – 1
மொத்தம்: 38