உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி, ஆட்டம் காட்டுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு உடலில் இருப்பதை உடனடியாக கண்டுபிடிக்கும் வகையில் கருவியை கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் இறங்கின. விரைவான கரோனா பரிசோதனை இயந்திரங்களை கண்டுபிடிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்காவும் அனுமதியை வழங்கியது.
அமெரிக்காவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை லட்சம் தாண்டியது, உயிரிழப்பு ஆயிரத்தை தாண்டியது. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த ஆய்வக நிறுவனமான அபாட் லெபாரட்டரீஸ், 5 நிமிடங்களில் கொரோனா பரிசோதனையில் தொற்று இருப்பதை கண்டறிய முடியும் என்று தெரிவித்துள்ளது,
நிறுவனத்தின் சிஓஓ ராபர்ட் போர்ட் கூறுகையில், ”சிறிய டோஸ்டர் இயந்திரத்தின் அளவில் இது இருக்கும். மூலக்கூறு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. தொற்று இல்லையென்றாலும் 13 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். சிறிய இயந்திரம் என்பதால் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லலாம். இதனை மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் மட்டுமே வைக்க வேண்டிய கட்டாயம் இல்லை.
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்கள் மற்றும் சுகாதார மையங்களில் அவசரத் தேவைக்காக இதனை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தின் ஆரம்பத்தில் இந்த பரிசோதனை இயந்திரம் விற்பனைக்கு வரும் என தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஜெர்மனியை சேர்ந்த ராபர்ட் பாஷ் நிறுவனம், கொரோனா வைரஸ் பரிசோதனை முடிவுகளை இரண்டரை மணி நேரத்தில் கிடைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்திருப்பதாக அறிவித்திருந்தது.