கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியை தொடங்கினர் இந்திய ஆராய்ச்சியாளர்கள்!

Read Time:6 Minute, 1 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரசினை கட்டுப்படுத்த மருந்துக்களை தயார் செய்யும் பணியில் அரசுக்கள், தனியார் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள் தனியாகவும், கூட்டாவும் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்திய மருத்துவ ஆய்வாளர்களும் கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளனர்.

கொடூரமான கொவிட் -19 கொரோனா வைரசுக்கு எதிரான போரில், தடுப்பூசிகளை உருவாக்குவதற்கு இந்தியாவின் முதன்மை நிறுவனமான நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் இம்யூனாலஜி (NII), பல்வேறு துறைகளில் சிறந்த பத்து விஞ்ஞானிகளை கொண்ட ஒரு முக்கிய குழுவை உருவாக்கி உள்ளது. உலகத்தை பேரழிவிற்கு உட்படுத்தியுள்ள வைரசுக்கு சிகிச்சையளிப்பதற்கான தடுப்பூசியை உருவாக்கும் மிகவும் சவாலான திட்டத்தை தொடங்கி உள்ளது.

டெல்லியை தலைமையிடமாகக் கொண்ட என்.ஐ.ஐ. தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஎம்ஆர்) உதவியுடன் உலக சுகாதார அமைப்புடன் (WHO) நெருக்கமான ஒருங்கிணைப்பில் ஒரு தன்னாட்சி அமைப்பாக செயல்படுகிறது. என்.ஐ.ஐ. இயக்குநரும், பல உயிர்காக்கும் தடுப்பூசிகளை உருவாக்குவதில் பங்களித்த நாட்டின் முன்னணி விஞ்ஞானியுமான டாக்டர் அமுல்யா கே. பாண்டா தலைமையிலான குழு கொரோனா வைரசுக்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளது.

பாண்டாவின் குழு ஏற்கனவே புற்றுநோய்க்கான தடுப்பூசியை உருவாக்கி உள்ளது, அதற்கான சோதனைகள் சென்னையில் இறுதி கட்டத்தில் உள்ளன. என்.ஐ.ஐ உருவாக்கிய தொழுநோய் மற்றும் காசநோய்க்கான தடுப்பூசிகள் ஏற்கனவே இந்த மதிப்புமிக்க ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உலகளவில் பாராட்டுக்களை பெற்றுள்ளன.  டாக்டர் பாண்டா ஐ.ஐ.டி சென்னையில் எம்.டெக். படித்தவர் மற்றும் ஐ.ஐ.டி டெல்லியில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றவர், மற்றும் பயோபிரசஸ் இன்ஜினியரிங் துறையில் அனுபவம் வாய்ந்தவர் மற்றும் தடுப்பூசிகளை உருவாக்குவதற்கான சூத்திரங்களை நன்கு அறிந்தவர்.

டாக்டர் அமுல்யா கே. பாண்டா இதுதொடர்பாக பேசுகையில் “உண்மையிலேயே கடுமையான சவாலை எனது வாழ்க்கையில் சந்திக்கிறேன். கொரோனா வைரசுக்க எதிராக தீர்வு காண வேண்டும், மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்ற 24 மணிநேரமும் சிந்தித்து இப்போது களத்தில் இறங்கி உள்ளோம். கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. அரசின் சார்பில் சில அனுமதி கிடைக்க வேண்டியது உள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் மெல்ல தேறி வருகிறார்கள்.

அவர்களுக்கு கொரோனாவுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி என்பது நல்ல செய்தாக இருக்கும். அந்த நோயாளிகளின் உடலில் இருக்கும் எதிர்ப்புச்சக்தி எவ்வாறு கொரோனா வைரசுடன் சண்டையிடுகிறது என்பதை பார்க்க உள்ளோம். இத்தாலி, ஜெர்மனி, சீனாவில் இருந்து வந்து பயணிகள் தற்போது பல்வேறு துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இப்போதுள்ள நிலையில் அனைத்தையும் விரிவாக விளக்க முடியாது. இந்த ஆய்வுக்குழுவில் மருந்து வல்லுநர்கள், நோய்எதிர்ப்பு சக்தி குணநலன்களை அறிந்த வல்லுநர்கள், நோய்பரிசோதனை நிபுனர் உள்ளிட்ட பலர் இடம் பெற்று உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இதற்கு முன் பல்வேறு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆய்வுப்பணியில் இருந்தவர்கள். எங்கள் குழுவில் இருக்கும் ஆய்வாளர்கள் புற்று நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதை பரிசோதனையில் வைத்து உள்ளனர், சென்னையில் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. தொழுநோய், காசநோய் ஆகியவற்றுக்கும் தடுப்பு மருந்து கண்டுபிடித்து உள்ளனர்.

பெரும்பாலான வைரஸ்களுக்கு உடலமைப்பு நிலையானதாக இருக்கும். ஆனால், கொரோனா வைரஸ் மிக விரைவாக தனது உருவத்தை, கட்டமைப்பை மாற்றிக்கொண்டே இருக்கும். இதனால் அதை குறித்து நாம் அணுகுவது கடினமாக இருக்கும். இது போலியோ வைரஸ் போன்றது கிடையாது. கோவிட்-19 வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது என்பது சவாலானது, அதற்கு கால அவகாசம் ஆகும். ஆனால், ஐசிஎம்ஆர், அரசின் உதவிகள் மூலம் விரைவாக முடிக்க முடியும் என தெரிவித்து உள்ளார்.

முதல்கட்டமாக எலிக்கும், அதன்பின் முயலுக்கும், 3வதாக குரங்கிற்கும் கொடுத்து பரிசோதிப்போம். மனிதர்களுக்கு தடுப்பு மருந்தை கொடுத்து பரிசோதிப்பது என்பது கடைசிநிலை. அது மருத்துவ விதிகளுக்கு உட்பட்டுதான் நடக்கும்” எனத் தெரிவித்தார்