கொரோனா வைரசால் கோடி, கோடியாக சம்பாதிக்கும் சீனா…!

Read Time:4 Minute, 31 Second

சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் கிட்டத்தட்ட 200 உலக நாடுகளில் மெல்ல கால் பதித்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. மக்கள் வேகமாக உயிரிழந்து வருகிறார்கள். இந்நிலையில் நிலைமையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறது சீனா. உலகம் முழுவதும் வைரஸ் பரவும் நிலையில் சீனாவில் அதனுடைய தாக்கம் குறைந்து வருவதாக அங்கிருந்துவரும் ஊடகங்கள் செய்தி வெளியிடுகிறது.

இந்நிலையில் சீனாக்காரர்களின் மூளையில் சாமர்த்தியமாக சம்பாதிக்கும் திட்டம் உதித்து உள்ளது. அங்குள்ள ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள், இப்போது மிகுந்த லாபகரமான சந்தைக்கு மாறி இருக்கின்றன. கொரோனா வைரஸ் என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உருவானதை வைத்துக்கூட அந்த நாடு கோடி கோடியாக பணத்தை சம்பாதித்து கொண்டிருக்கிறது, அதுவும் அன்னிய செலாவணியை சம்பாதித்துக்கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் உலகமெங்கும் ‘என்95’ (N95) முகக்கவசங்களுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது. பிப்ரவரி மாதத்தின் தொடக்கத்தில் சீனாவில் கொரோனா வைரஸ் உச்சகட்டத்துக்கு சென்று கொண்டிருந்தபோது, குவான் சூன்ஸி என்றொரு நிறுவனம், ஏழே நாளில் ஒரு முகக்கவச தொழிற்சாலையை உருவாக்கியது. வடகிழக்கு சீனாவில் 5 தயாரிப்பு பிரிவுகளையும் ஏற்படுத்தியது. அவற்றில் என்95 முகக்கவச தயாரிப்பு பட்டையை கிளப்பத் தொடங்கியது.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று குறைந்துள்ள தருணத்தில், 34 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மருந்து நிறுவனம், இப்போது லாபகரமான தொழிலாக முகக்கவச உற்பத்தியை மாற்றி பணம் சம்பாதித்து வருகிறது. ஐரோப்பிய நாடுகளிலேயே மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து வருகிற இத்தாலிக்கு இந்த நிறுவனம் என்.95 முகக்கவசங்களை ஏற்றுமதி செய்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் இந்த நிறுவனம் மட்டுமின்றி இதுபோல் 8,950 புதிய நிறுவனங்கள் இந்த முகக்கவச உற்பத்தியில் ஈடுபடத்தொடங்கின.

குவாங்டாங் மாகாணத்தில் டோங்குவான் நகரில் உள்ள முகக்கவச நிறுவனத்தின் விற்பனை மேலாளர் ஸி ஜிங்குய் பேசுகையில் “முகக்கவசம் தயாரிக்கிற எந்திரம், உண்மையான பண நோட்டு அச்சிடும் எந்திரம் போலத்தான். கடந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இப்போது பல மடங்கு லாபம் சம்பாதித்து தருகிறது. ஒரு நாளில் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை முகக்கவசங்கள் தயாரிப்பது என்பது பணத்தை அச்சிடுவதற்கு சமமாக இருக்கிறது,” எனக் கூறுகிறார். அங்கு , ஜனவரி 25-ம் தேதியில் இருந்து இங்கு 24 மணி நேரமும் உற்பத்தி நடந்து கொண்டே இருக்கிறது.

நிறுவனத்தின் கைவசம் இப்போதைக்கு நூற்றுக்கணக்கான ஆர்டர்கள், வினியோகத்துக்காக காத்திருக்கிறது. இவற்றின் மதிப்பு 4 மில்லியன் டாலருக்கும் அதிகம் (சுமார் ரூ.103 கோடியே 60 லட்சம்) ஆகும். இதற்கிடையே ஜவுளி நிறுவனங்களும் தொழிலை மாற்றியுள்ளன. அவைகள் முகக்கவச உற்பத்தியில் தடாலடியாக இறங்கின என தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தினந்தோறும் தலா 11 கோடியே 60 லட்சம் முக கவசங்கள் தயாரிக்கப்படுகின்றன. பல நிறுவனங்களும் வெளிநாட்டு ஆர்டர்களை ஏற்று வினியோகித்து வருகின்றன. வைரஸ் முற்றிலுமாக ஒழிந்து விட்டாலும் கூட இனி மனிதர்களிடம் முகக் கவசங்களை அணிகிற வழக்கம் தொடரும் என்பதால் தங்கள் தொழில் தொடர்ந்து பிரகாசிக்கும் என்று அந்நாட்டு நிறுவனங்கள் தொடர்ச்சியாக உற்பத்தியை பெருக்கி வருகின்றன.