தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது.
சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் இதுதொடர்பாக பத்திரிக்கையாளர்களிடம் நேற்று பேசுகையில், தமிழகத்தில் தற்போது கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று(நேற்று) மட்டும் 4 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்து உள்ளார். இதில்,சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள 25 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவர் தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இவர் வெளிநாடுகளுக்கோ அல்லது வெளி மாநிலங்களுக்கோ செல்லவில்லை. எனவே இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதின் காரணம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். தற்போது தமிழகத்தில் 277 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
வெளிநாடுகளில் இருந்து வந்த 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், குடியுரிமை ஆணையத்தில் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் 85 ஆயிரத்துக்கு மேற்பட்டோரும் தற்போது வீட்டு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.