உலக அளவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை எட்டியுள்ளது.
சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம், ஐரோப்பிய நாடுகளிலும், அமெரிக்காவிலும் அதிகரித்து வருகிறது.
183 நாடுகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்தை நெருங்கிவிட்டது. உலக அளவில் பலியானோர் எண்ணிக்கை 38 ஆயிரத்தை எட்டியுள்ளது. இதில் மூன்றில் இரண்டு பங்குபேர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். இதுவரை சுமார் 165,607 பேர் குணமடைந்துள்ளனர்.
இத்தாலி நாட்டில் நாள்தோறும் 800-க்கும் மேற்பட்டோர் பலியாகி வருகிறார்கள். அங்கு பலியானோர் எண்ணிக்கை 11,591 ஆக உயர்ந்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது.
ஸ்பெயின் நாட்டிலும் இதுபோன்ற மோசமான நிலையே காணப்படுகிறது. ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,716 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 87,956 ஆக உயர்ந்து உள்ளது. பிரான்ஸ் நாட்டில் 3,024 பேர் பலியாகியுள்ளனர். 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானிலும் 2,757 பேர் பலியாகியுள்ளனர். 42 ஆயிரம் பேர் வரையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 164,253 ஆக உள்ளது. சாவு எண்ணிக்கை 3,165 ஆக உள்ளது. பெல்ஜியம் நாட்டில் ஒரே நாளில் 1,063 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அதனால் நோயாளிகள் மொத்த எண்ணிக்கை 12 ஆயிரத்தை நெருங்கியது. 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நோய் தீவிரத்தை தடுக்க ஏப்ரல் 19-ந் தேதிவரை பெல்ஜியத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கொரோனா வைரசுக்கு 1,408 பேர் பலியாகியுள்ளனர். 22,141 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜெர்மனியில் 66,885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 650 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அச்சத்தை அதிகரிக்க செய்துள்ளது.