டெல்லி நிஜாமுதீனிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அதிகமானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…

Read Time:6 Minute, 40 Second
Page Visited: 70
டெல்லி நிஜாமுதீனிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் அதிகமானோர் தமிழகத்தை சேர்ந்தவர்கள்…

இந்தியாவில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுக்கள் கடுமையான போராடி வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவுவதை தடுக்கும் வகையில் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. சமூக விலகல் நடவடிக்கையினால் மட்டுமே கொரோனா வைரசை ஒழிக்க முடியும் என்பதால், மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பரவலுக்கு மையமாக டெல்லி நிஜாமுதீன் பகுதி அமைந்து உள்ளது.

தென் மேற்கு டெல்லியில் நிஜாமுதீன் பகுதியில் உள்ள நிஜாமுதீன் காலணியில் தப்லிக் சர்வதேச தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. நிஜாமுதீன் மர்காஸ் என்று இதற்கு பெயராகும். இந்த மாதம் 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் இந்த ஜமாத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டு பெரும் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 9 இந்தியர்கள் உள்ளிட்ட 10 பேர் கொரோனா காரணமாக உயிரிழந்து உள்ளனர்.

கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கிருந்து 200 பேர் கொரோனா அறிகுறிகளுடன் டெல்லியில் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில், லோக் நாயக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 6 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களிடம் விசாரணை நடத்திய போது ஜமாத்தில் நடைபெற்ற மத மாநாட்டில் பங்கேற்றதையும் டெல்லியில் உள்ள சர்வதேச தப்லிக் ஜமாத்தில் ஆயிரக்கணக்கானோர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து அங்கிருந்தவர்களை வெளியேற்றும் பணியில் போலீசாரும், சுகாதாரத்துறையினரும் ஈடுபட்டனர். அவர்களை பரிசோதனை செய்ததில் பலருக்கும் கொரோனா அறிகுறிகள் இருந்ததும், பலருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதும் தெரியவந்தது. இந்த மத வழிபாடு மாநாட்டை நடத்திய முஸ்லிம் மவுலானாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்ய டெல்லி முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவல் உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக டெல்லி மாநில அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலில், “தப்லிக் தலைமை அலுவலகத்தில் வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீர், தமிழகம், ஆந்திரா, அந்தமான் நிகோபர் ஆகியவற்றில் இருந்து வந்தவர்களுக்கு கரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டள்ளது,” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த பலரும் கலந்துகொண்டதால் தமிழகமும் தீவிர கண்காணிப்பில் உள்ளது. டெல்லி நிஜாமுதீன் கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டதாக சொல்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்தும் பணியில் தமிழக சுகாதாரத்துறை இறங்கியுள்ளது. அதில், 980 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்களில் 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டம் முடிந்த பின்னர் அனைவரும் விமானம், ரெயில்கள் மூலம் தமிழகம் திரும்பியுள்ளனர். இதனால் கொரோனா பரவும் அபாயமும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, உடனடியாக இவர்கள் அனைவரும் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மார்ச் 30-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் புதிதாக 17 பேருக்கு தொற்று இருப்பதை உறுதி செய்தார். இதில், 10 பேர் டெல்லி ஜமாத் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள். மேலும், கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை கண்டறியவும், அவர்களை தனிமைப்படுத்தும் பணியும் மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த பலர் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகியது.

இந்நிலையில் டெல்லி நிஜாமுதீனிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களில் பாதி பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், டெல்லி நிஜாமுதீனிலிருந்து 1800 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். அவர்களில் 510 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். அசாம் மாநிலத்தை சேர்ந்த 216 பேரும் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் வெளிநாட்டவர்கள் 281 பேர் என அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 0
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %