தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவிடாமல் மத்திய, மாநில அரசுக்கள் நடவடிக்கையை மேற்கொண்டன. இந்நிலையில் டெல்லியில் நிஜாமுதீன் பகுதி இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலுக்கான மையமாகியுள்ளது.
டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள தப்லிக் ஜமாத் சர்வதேச அலுவலகத்தில் மார்ச் மத்தியில் முஸ்லீம் மத வழிபாடு மாநாடு நடந்தது. வெளிநாட்டவர்கள் 300 பேர் வரையில் கலந்துக்கொண்ட இந்த மாநாட்டில் இந்தியாவிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டுள்ளனர். தமிழகத்திலிருந்தும் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர். அவர்கள் மாநாடு முடிந்ததும் ரெயில் மற்றும் விமானம் மூலமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இந்த மாநாட்டில் கலந்துக்கொண்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு திரும்பிய பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்திற்குள் வந்தவர்களை அடையாளம் காணும் பணி தீவிரமாக நடைபெறுகிறது.

தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்று வரையில் 67 ஆக இருந்தது.
இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசுகையில், “டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களில் 1,131 பேர் தமிழகம் திரும்பியுள்ளனர். இதில் 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெல்லி மாநாட்டில் கலந்துக்கொண்டவர்கள் தாமாக முன்வந்து பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்,” எனக் கூறினார்.
புதியதாக 57 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 50 பேர் டெல்லி மத நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டவர் எனவும் தெரிவித்து உள்ளார்.