இந்தியாவில் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் துப்புரவு பணியாளார்கள், மருத்துவ ஊழியர்கள், காவல்துறையினர் முழு பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.
துப்புரவு பணியாளர்கள் நகரங்களை சுத்தமாக வைத்துக்கொள்ளும் பணியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்தியுள்ளார்கள். அவர்களுக்கு பிரதமர் மோடி முதல் கடைசி குடிமகன் வரையில் கடமைப்பட்டுள்ளனர். அவர்களுடைய பணியை பலரும் பாராட்டிவருகிறார்கள். இந்நிலையில், இந்தியா முழுவதும் வைரலாக பராட்டுக்களுடன் பகிரப்பட்டுவரும் வீடியோ ஒன்றில், பொதுமக்கள் துப்புரவு பணியாளர்களை மலர் தூவி வரவேற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோ பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவின் நாபாவில் எடுக்கப்பட்டுள்ளது. குப்பைகளை எடுக்கவரும் துப்புரவு பணியாளர்கள் மீது மாடியிலிருந்து மக்கள் மலர்களை தூவுகிறார்கள். சிலர் அவர்களுக்கு மாலையும் அணிவிக்கிறார்கள். துப்புரவு பணியாளர்களின் பணியை பொதுமக்கள் கைகளை தட்டி பாராட்டுகிறார்கள். இந்த வீடியோவை ஏஎன்ஐ செய்தி நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவிற்கு பலரும் தங்களுடைய அன்பை தெரிவித்து வருகிறார்கள்.
#WATCH Punjab: Residents of Nabha in Patiala applauded sanitation workers by clapping for them and showering flower petals on them. Some even offered garlands of currency notes to one of the workers. #COVID19 (31-3-2020) pic.twitter.com/238f6oBlWn
— ANI (@ANI) March 31, 2020
இதற்கிடையில் பஞ்சாபில் பல அரசியல்வாதிகள் ஏழைகளுக்கு உதவுவதற்காக ரேஷன் விநியோகம் செய்கிறார்கள். அந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள். அங்கு அரசு கேட்டுக்கொண்ட சமூக விலகல் கடைபிடிக்கப்படவில்லை. அம்மாநில முதல்-அமைச்சர் அமரீந்தர் சிங் அனைவரையும் குறைந்தது இரண்டு மீட்டர் தூரம் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், அவரது கட்சியை சேர்ந்த பல தலைவர்கள், அமைச்சர்கள் உட்பட பல அரசியல்வாதிகள் எச்சரிக்கையுடன் காற்றில் பறக்கவிட்டுள்ளதை படங்கள் காட்டுகின்றன.