ஊரடங்கு..! மனித நடமாட்டம் குறைந்து உள்ளதால், லட்சக்கணக்கான ‘ஆலிவ் ரிட்லி’ ஆமைகள் ஒடிசா கடற்கரைக்கு திரும்புகின்றன..

Read Time:4 Minute, 28 Second

இந்தியாவில் காணப்படும் கடல் ஆமை இனங்களில் அபூர்வமானது ‘ஆலிவ் ரிட்லி’ வகை ஆமைகள். உலகிலேயே அதிகமாக காணப்படும் ஆமை இனமானது தற்போது அழிந்து வரும் பட்டியலில் உள்ளது.

சுமார் 120 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழ்ந்து வரும் ஆலிவ் ரிட்லி ஆமைகள், இந்திய ஆழ்கடல் பகுதிகளில் வசிக்கக்கூடியவை. ஆலிவ் ரிட்லி ஆமைகள் கடலோரப் பகுதிக்கு ஆண்டுதோறும் நவம்பர் முதல் மார்ச் மாதம் வரையிலான காலங்களில் முட்டையிட வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. இந்தியாவில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா மாநில கடற்கரையோரங்களில் அதிகளவில் முட்டைகள் இடுகின்றன.

இந்த ஆமை இனங்கள் கடற்கரை மணல் பரப்பில் குழி தோண்டி முட்டைகளை இடும். முட்டைகள் பொறித்த பிறகு வெளியாகும் ஆமைக் குஞ்சுகள் கடலுக்குச் சென்று, 25 ஆண்டுகள் கழித்து பருவம் எய்தியவுடன் மறக்காமல், தான் பிறந்த இடத்துக்கே மீண்டும் வந்து முட்டையிடும் இயல்பு கொண்டவை.

ஆலிவ் ரிட்லி ஆமைகள் அழிந்து வரும் நிலையில் அவற்றின் முட்டைகளை உள்ளூர் இளைஞர்களின் துணையுடன் சேகரித்து வைத்து பாதுகாத்து, குஞ்சு பொரித்ததும் பத்திரமாக மீண்டும் கடலில் விடுவது என வனவிலங்கு பாதுகாப்புத் துறையினர் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.

கடந்த பல ஆண்டுகளாக மக்கள் கூட்டம் மற்றும் கப்பல், விசைப்படகுகளால் குறைந்து காணப்படும் ஆமைகள், தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக அமைதியான சூழலில் இடையூறு ஏதுமின்றி ஆலிவ் ரிட்லி ஆமைகள் பொதுவாக காணப்படும் அளவைக் காட்டிலும் அதிகளவில் முட்டையிட வருகை தந்துள்ளன.

கடந்த ஆண்டு இந்த வகை ஆமைகள் முட்டையிட வருகை தராத நிலையில் இந்த ஆண்டு முன்னில்லா வகையில் ஆமைகள் வந்துள்ளன. இதற்கு முன் 2002, 2007, 2016 ஆண்டுகளிலும் ஆமைகள் வருகை புரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா மாநில கடற்கரையான காஹிர்மாதாவில் கிட்டத்தட்ட 2,78,502 ஆமைகள் முட்டையிடுவதற்காக வந்துள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளனர். மேலும் ஊரடங்கு காரணமாக தற்போது உள்ள அமைதியான சூழ்நிலையில் பகல் நேரத்தில் மட்டுமே சுமார் 70000 ஆமைகள் வருகை தருகின்றன.

அவ்வாறு ஆமைகள் இட்ட முட்டைகளை எடுத்து பத்திரமாக கூடாரத்தில் வைக்கப்படுகிறது. கூடாரத்தில் பாதுகாப்புடன் இருக்கும் முட்டையிலிருந்து பொரித்த ஆமை குஞ்சுகள் சரியாக 48 நாட்களிலிருந்து 51 நாட்களுக்குள் வெளியே வருகின்றன. சராசரியாக நூறு முட்டைகளிலிருந்து 99 சதவீத குஞ்சுகள் பொரித்துவிடுகின்றன. ஒன்று அல்லது இரண்டு முட்டைகள் மட்டுமே வீணாகின்றன.

இதுகுறித்து வனத்துறை அதிகாரி கூறுகையில், இந்த வகை ஆமைகள் முட்டையிட கரைக்கு வரும் போது, நாய், நரி போன்ற விலங்குகளாலும், கப்பல்கள், விசைப் படகுகள், மீன் வலைகளால் காயமுற்று இறந்து விடுகின்றன. ஆலிவ் ரிட்லி ஆமை வகையை காக்கும் விதமாக ஆமைகளின் முட்டைகளைப் பாதுகாக்கும் பொறிப்பகம் அமைத்துள்ளோம். பொறிப்பகத்தில் முட்டைகள் பாதுகாப்பாக, உரிய வெப்ப நிலையில் மணலில் புதைத்து வைக்கப்படும். முட்டைகள் பொறிக்கப்பட்டு குஞ்சுகள் வெளியில் வரும், அவற்றை நாங்கள் சேகரித்து கடலில் விடுவோம்.

இவ்வாறு ஆமைகளைக் காப்பாற்ற வனத் துறையினரும், சூழலியல் ஆர்வலர்களும் மட்டுமின்றி உள்ளூர் மீனவ மக்களும் சேர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.