அமெரிக்காவில் கொரோனா வைரசால் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழக்கலாம்…

Read Time:1 Minute, 43 Second

அமெரிக்காவில் வரும் வாரங்கள் மற்றும் மாதங்களில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்று வெள்ளை மாளிகை தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் மற்ற நாடுகளைவிடவும் மிகவும் தீவிரமாக பரவி வருகிறது.

பொருளாதாரத்தை பாதுகாக்க விரும்பும் டொனால் டிரம்ப், கொரோனா வைரஸ் விவகாரத்தில் மெத்தனமாக நடக்கிறார் என்ற விமர்சனம் தொடர்கிறது. அமெரிக்காவில் கொரோனாவினால் ஒவ்வொருநாளும் உயிரிழப்பவர்கள் மற்றும் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது.

அமெரிக்காவில் இதுவரையில் கொரோனா வைரசுக்கு 188,592 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 4,055 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இந்நிலையில் அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், வரவிருக்கும் மோசமான நாட்களுக்கு உங்களை தயார் படுத்திக்கொள்ளுங்கள் என அமெரிக்க மக்களிடம் கூறி உள்ளார். வரும் நாட்கள் “வலி மிகுந்தவையாக” இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். வைரஸ் தொற்று பரவலை கொள்ளை நோய் என்று விவரித்து வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப் “இது வலி மிகுந்ததாக இருக்கும்… அடுத்த இரண்டு வாரங்கள் மிக மிக மோசமான காலமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.