அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 5110 பேர் சாவு; பிரதமர் மோடியின் அறிவுரையை பின்பற்றும் அமெரிக்கர்கள்…!

Read Time:3 Minute, 50 Second

வல்லரசு நாடான அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் கோர தாண்டவமாடி வருகிறது.

அங்கு ஏறத்தாழ 25 கோடி மக்கள் வீடுகளுக்குள் முடங்கிக்கிடக்கிற போதும், கொரோனா வைரஸ் பரவுவது அங்கு கட்டுக்குள் இல்லாமல் செல்கிறது. நியுயார்க்கில்தான் அதிகபட்சமாக 75 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதித்து உள்ளது. அங்கு 2000 பேர் வரையில் வைரஸ் தொற்றுநோய்க்கு பலியாகி இருக்கிறார்கள்.

பால்டிமோர் நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழக தகவல் மையம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்க நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 215,300 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பலியானவர்களின் எண்ணிக்கை 5110-ஐ எட்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க மாகாணங்களில் கொரோனா வைரஸ் நோயால் மொத்த பலி எண்ணிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பது குறித்து வா‌ஷிங்டன் வெள்ளை மாளிகை தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

நிபுணர்கள் கணிப்புபடி தொற்று நோயை கட்டுப்படுத்துவதற்கு அதிகாரிகள் எடுத்து வருகிற முயற்சிகள் பலன் அளிக்கிறபோது பலி எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் வரை இருக்கலாம். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவலை அதிகாரிகளால் கட்டுப்படுத்த முடியாத நிலை உருவாகிறபோது பலி எண்ணிக்கை 15 லட்சத்தில் இருந்து 22 லட்சம் வரை போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வரும் 15-ம் தேதி ஒரே நாளில் உச்ச அளவாக 2,214 பேர் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாகவும் அதிகாரிகள் கணித்துள்ளனர். அதன் பின்னர் இறப்புவீதம் குறைந்து விடுமாம். ஜூன் 1-ம் தேதி வரை தினமும் இறப்புவீதம் 250 ஆக இருக்கும். ஜூலை 1-ம் தேதி வாக்கில் இது தினந்தோறும் 100-க்கு கீழே வந்து விடும் என்று அதிகாரிகள் கணித்திருப்பதாக வெள்ளை மாளிகை தெரிவித்து உள்ளது.

அமெரிக்கர்கள் ஆர்வம்

தற்போது ஊரடங்கு உத்தரவுக்கு மத்தியில் மக்கள் மன அழுத்தம், பதற்றங்களில் சிக்கியுள்ளனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அமெரிக்காவில் 25 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த பல ஆண்டுகளாவே யோகா பயிற்சியை பலரும் விருப்பமுடன் மேற்கொண்டு வருகின்றனர்.

பிரதமர் மோடியின் முயற்சியினால் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21-ம் தேதியன்று சர்வதேச யோகா தினம் உலகமெங்கும் கடைப்பிடிக்கப்படுவது. இந்நிலையில் பிரதமர் மோடியும் ஊரடங்கின் போது யோகா பயிற்சிகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கி வீடியோ வெளியிட்டுள்ளார். அதனை அமெரிக்க அதிபர் மகள் இவாங்கா டிரம்ப் பகிர்ந்துள்ளார். அமெரிக்கர்களும் அதனை வரவேற்றுள்ள்ளனர். ஊரடங்குக்கு மத்தியில் வீட்டிலிருக்கும் அமெரிக்கர்கள் ஆர்வத்துடன் யோகா பயிற்சி மேற்கொள்வது அதிகரித்து இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.