கொரோனா வைரஸ் பற்றிய உண்மையை சீனா மறைக்கிறது – அமெரிக்கா குற்றச்சாட்டு

Read Time:4 Minute, 1 Second

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் தான் முதன் முதலில் கொரோனா வைரஸ் காணப்பட்டது. அங்கு வேகமாக பரவியது. பின்னர் சீன அரசு எடுத்த கடுமையான நடவடிக்கைகள் காரணமாக கொரோனா பரவுவது கட்டுப்படுத்தப்பட்டது.

இருப்பினும், சீனாவில் 81 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3,310-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருக்கிறார்கள். சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா சீனாவை விட இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா, பிரான்ஸ் நாடுகளில் அதிக உயிரை குடித்து உள்ளது. அமெரிக்காவில் சுமார் 6 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதோடு, 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பரவியதற்கு சீனா தான் காரணம் என்று ஏற்கனவே அமெரிக்க ராணுவம் குற்றம்சாட்டியது. இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்நிலையில் தங்கள் நாட்டில் நிகழ்ந்த கொரோனா சாவு பற்றிய உண்மையான தகவல்களை மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி அமெரிக்க குடியரசு கட்சியின் எம்.பி.க்கள் பென் செஸ்சே, மைக்கேல் மெக்கால் ஆகியோர், புலனாய்வு துறையின் அறிக்கையை மேற்கோள் காட்டி அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதுகுறித்து டொனால்டு டிரம்ப் பேசுகையில், சீனா தெரிவிக்கும் தகவல்கள் துல்லியமானவை என்று நமக்கு எப்படி தெரியும்? என்று கேள்வி எழுப்பியதோடு, எண்ணிக்கையை அவர்கள் குறைத்து வெளியிடுவதாகவே தெரிகிறது என்றார். அமெரிக்க குடியரசு கட்சி எம்.பி.க்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தங்கள் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலியானவர்கள் பற்றிய தவறான தகவல்களை தெரிவித்து சர்வதேச சமுதாயத்தை சீனா ஏமாற்றுகிறது.

சீனா தெரிவிக்கும் எண்ணிக்கை தகவல்கள் பொய்யானது. இந்த விஷயத்தில் சீனா ஏற்கனவே பொய் சொல்லியது, இப்போதும் பொய் சொல்கிறது, இனி தொடர்ந்து சீனா பொய் சொல்லும். கொரோனா தொடர்பாக குப்பையான பிரசாரத்தை சீனா செய்கிறது. அமெரிக்காவை விட தங்கள் நாட்டில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவு என்று காட்டிக் கொள்வதற்காக சீனா இப்படி செய்து வருகிறது. உண்மை தகவல்களை தெரிவிக்கவிடாமல் டாக்டர்களையும், பத்திரிகையாளர்களையும் அடக்கி வைத்து உள்ளது.

எனவே கொரோனா வைரசை ஒழிப்பதற்கான போரில் சீனாவை நம்பத்தகுந்த பங்குதாரராக கருத முடியாது. கொரோனா பாதிப்பு தொடர்பாக சீனா என்னென்ன தகவல்களை மறைக்கிறது என்பதை அமெரிக்க புலானாய்வு துறை கண்டுபிடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்காக டிரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள சிறப்பு குழுவில் உறுப்பினராக இடம் பெற்றுள்ள டாக்டர் டெபோரா பிர்சும், கொரோனாவால் சீனாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகவும் தீவிரமானது என்றும், ஆனால் உண்மையான தகவல்கள் மறைக்கப்படுவதாகவும் தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.