விளக்கேற்றினால் கொரோனா கொல்லப்படுமா? பிரதமர் மோடியின் வீடியோ செய்தி தவறாக பரப்பப்படுகிறது

Read Time:2 Minute, 54 Second

கொரோனா வைரஸ் என்ற கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்து போரிட்டு வீழ்த்துவதற்காக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவை பிரதமர் மோடி அமல்படுத்தினார்.

ஊரடங்கு காரணமாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கின் 10-வது நாளான நேற்று பிரதமர் மோடி, ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அப்போது அவர், கொரோனா வைரசுக்கு எதிராக ஒன்றுபட்டு, ஊரடங்கை கடைப்பிடித்து வருகிற நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்தார். அத்துடன், கொரோனா வைரசுக்கு எதிராக நாம் யாரும் தனியாக இல்லை என்பதை காட்டும் வகையிலும், நாட்டின் 130 கோடி இந்தியர்களும் ஒன்றுபட்டுள்ளோம் என்ற பலத்தை தெரிவிக்கும் வகையிலும் 5-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்து விடுங்கள், வீட்டின் 4 மூலைகளிலும் அகல் விளக்கு அல்லது டார்ச் விளக்கு அல்லது செல்போன் விளக்கு அல்லது மெழுகுவர்த்தி ஏற்றுவோம் என அழைப்பு விடுத்தார்.

இந்தியர்களின் ஒற்றுமையை பரைசாற்றும் வகையில் பிரதமர் மோடி விளக்கேற்ற சொன்னார்.

ஆனால், அவருடைய தகவல் போலியாகவும், அவதூறாகவும் சித்தரிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் பரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடி விளக்கேற்றினால் கொரோனாவை கொல்லலாம் என்று சொல்லவில்லை. ஆனால், பிரதமர் மோடி அவ்வாறு கூறியது போன்று மீம்ஸ்களால் சமூக வலைதளங்கள் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம் ஆபாசமாகவும் சித்தரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு பா.ஜனதாவினர் தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்றினால் வெப்பம் அதிகரிக்கும். இதனை நாசாவே கூறியுள்ளது. இதனால் கொரோனா சாவும் என சமூக வலைதள விஞ்ஞானிகளும் புதிய தகவல்களை கண்டறிந்து வருகிறார்கள். இதுவும் பொய்யான தகவலாகும். பிரதமர் மோடி விளக்கேற்ற கூறியது ஒற்றுமையை பிரதிபலிக்கதான். எனவே,, இதுபோன்ற போலியான தகவல்களுக்கு செவி சாய்க்க வேண்டாம். வீடுகளில் விளக்கேற்றும் நடைமுறை ஆதிமுதல் இருந்துவருகிறது. ஒரு நற்செயலாக நம்பி அனைவரும் விளக்கேற்றுவோம், கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் இருளை அகற்றுவோம்.