ஊரடங்கு..! அதிகரித்த கணவன்-மனைவி சண்டை… குவியும் புகார்கள்!

Read Time:4 Minute, 38 Second

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது.

இதனால் தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. வேலைக்கு செல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் ஏராளமானோர் வருமானத்துக்கு வழியின்றி வேலையிழப்பு ஊதியக் குறைவு போன்ற அச்சம் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.

குடும்ப தகராறு!

வீட்டில் மன உளைச்சலுடன் உள்ள ஆண்கள் அதை பெண்கள் மீது வெளிப்படுத்தும் போது மோதல் ஏற்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே ஏற்படும் சாதாரண சின்னச்சின்ன சச்சரவுகள் கூட பூதாகரமாகி வன்முறையில் முடிகிறது. எவ்வளவு சண்டை வந்தாலும் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வருவதற்குள் அதனை மறந்துவிட்டு பேசுவதற்கான சூழ்நிலை இப்போது இல்லை.

தொடர்ந்து வீட்டுக்குள்ளேயே ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டும், பேசிக்கொண்டும் இருப்பதால் சண்டை மென்மேலும் அதிகரிக்கவே செய்கிறது.

இதன் எதிரொலியாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளில் இருந்து கடந்த 1-ந்தேதிக்குள் பெண்களுக்கு எதிராக 257 குற்றங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய மகளிர் ஆணையத்துக்கு புகார்கள் வந்துள்ளன. இதில் குடும்ப சண்டைகள் தொடர்பான புகார்கள் மட்டும் 69.

பெற்றோர் வீட்டுக்கு செல்ல முடிவதில்லை

இது குறித்து தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மா கூறியதாவது:-
குடும்பத்துக்குள் ஏற்பட்ட சண்டை தொடர்பாக 69 புகார்கள் வந்துள்ளன. உண்மையில் சொல்லப்போனால் இதைவிட அதிகமான புகார்கள் வந்திருக்க வேண்டும். ஊரடங்கு காரணமாக பெண்கள் எங்களிடம் புகார் அளிக்க வர முடிவதில்லை. போலீஸ் நிலையத்துக்கு செல்லவும் அச்சப்படுகிறார்கள்.

முன்பு சண்டை வந்தால் பெற்றோர் வீட்டுக்கு சென்று சில நாட்கள் தஞ்சம் அடைய முடியும். ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் இருப்பதால் அங்கு செல்ல முடியாமல் சண்டை, சச்சரவுக்களுக்கு இடையே கணவர்-மனைவி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்க வேண்டியுள்ளது.

திசை திருப்பவும்

இந்த சவாலான நேரத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது போல் உங்கள் மன ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.

மன அழுத்தம் வருவதும் போவதும் இயல்பான ஒன்று! எனவே நீங்கள் மன அழுத்தம் அதிகரிப்பதை உணரும் போது, உங்களை திசை திருப்பவும் ஓய்வெடுக்கவும் உதவும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். இது உடற்பயிற்சியாக இருக்கலாம், மனதுக்குப் பிடித்தமான பாடல், நண்பரை தொலைபேசியில்அழைப்பது, குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டை சுத்தம் செய்தல் அல்லது ஆழ்ந்த சுவாசம். இதில் உங்களுக்கு எது வேலை செய்யுமா அந்த செயல்பாடுகளைத் தேர்ந்தெடுக்கவும்.

மேலும் தினசரி அட்டவணையை பராமரிப்பது மன அழுத்தத்தை குறைக்கும். உங்களுக்கு வீட்டில் குழந்தைகள் இருந்தால், அது இரட்டிப்பாகும். தினசரி விழித்திருக்கும் நேரம் மற்றும் உணவு, உடற்பயிற்சி, வீட்டு வேலைகள் மற்றும் ஓய்வு நேரங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களை அமைக்கவும். ஒரு வழக்கமான படுக்கை நேரத்தை நிறுவவும். ஒரு நிலையான வழக்கம் உங்கள் மன அழுத்தத்தைத் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பெண்களும் இக்கட்டான இந்த சூழலில் குடும்ப தலைவருக்கு ஏற்பட்டுள்ள பாரத்தை உணர்ந்து அதற்கேற்ப பொறுமையுடன் ஒத்துழைப்பை வழங்கி குடும்பத்தை நடத்துவது குடும்பத் தலைவியின் கடமையாகும்.