விருதுநகரில் மதுபானம் என்று ரூ.300-க்கு சுக்குகாபி வாங்கி குடித்த குடிமகன்கள்…!

Read Time:2 Minute, 56 Second

இந்தியா முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

தமிழகத்தில் மதுபான கடைகள் ஊரடங்கு காலத்தில் மூடப்பட்டுள்ளது. இதற்கிடையே மதுபானம் குடித்தால் கொரோனாவிடம் இருந்து தப்பிக்கலாம் என்ற போலியான செய்தியும் பரவி வருகிறது.

ஏற்கனவே மது என்றால் வெறியாக அலையும் மது பிரியர்கள் இந்த செய்தியை உண்மையென நம்பி மதுபானங்களை வாங்க துடிக்கிறார்கள். அவர்களிடம் கடுங்காப்பியை போட்டு கொடுத்து பணம் வாங்கிவிடலாம் என்ற நிலைதான் இருக்கிறது. இதுபோன்ற ஒரு சம்பவம் விருதுநகரில் நடந்துள்ளது.

விருதுநகர் ராமமூர்த்தி சாலையில் ரெயில்வே மேம்பாலத்துக்கு அடியில் 2 வாலிபர்கள் மதுபானம் விற்பனை செய்வதாக, அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை முன்பு தவமிருந்த மது பிரியர்களிடம் தகவல் பரவியது. மதுபாட்டில் உள்ளதாகவும், ரூ.300 கொடுத்து வாங்கிக்கொள்ளலாம் என்று வாலிபர்கள் ஆசை காட்டியுள்ளனர். இதனை நம்பிய அங்கிருந்த சிலர் ரூ.300 கொடுத்து குவாட்டர் மதுபாட்டிலை வாங்கி உள்ளனர்.

மதுபாட்டில்களை விற்பனை செய்தவுடன் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும் போலீசார் வருவதாக கூறி அங்கிருந்து நகர்ந்துவிட்டனர். இதனால் பாட்டில்களை வாங்கியவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். மதுபாட்டில்கள் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த மதுபிரியர்கள், வீட்டுக்கு கொண்டு செல்லக்கூட பொறுமை இல்லாமல் செல்லும் வழியிலேயே அதனை திறந்து குடித்துள்ளனர். மதுவை குடித்த அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். ஏனென்றால், அந்த பாட்டிலில் இருந்தது மதுபானம் இல்லையென தெரியவந்தது. அது உடலுக்கு மிகவும் ஆரோக்கியம் தரும் சுக்குகாபி என்பது தெரியவந்தது.

எப்படியும் டாஸ்மாக் கடை முன்பு மதுவுக்கு ஒரு கூட்டம் காத்திருக்கும். அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கலாம் என நினைத்த வாலிபர்கள், சுக்குகாபியை பாட்டிலில் அடைத்து ரூ.300-க்கு விற்பனை செய்து உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. ஊரடங்கு காலத்திலும் மதுவுக்கு ஏங்கி தவித்தவர்களுக்கு சுக்குகாபி கிடைத்ததுதான் மிச்சமாகியது. இச்சம்பவம் தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ்களாக பரவிவருகிறது.