கங்கை நதியை தூய்மைப்படுத்திய கொரோனா வைரஸ்..

Read Time:3 Minute, 46 Second

கொரோனா ஊரடங்கினால் காற்று மாசுபாடு குறைந்து சுற்றுச்சூழலில் நல்ல மாற்றம், அபூர்வ வகை ஆமைகள் வருகை அதிகரிப்பு, என நிகழும் இவ்வேளையில் இந்த பட்டியலில் இணைகிறது கங்கை நதி. ஆம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் கங்கை நதியின் தரம் மேம்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

கங்கை நதி அதன் புனிதத்தினாலும் கலாசார மகிமைக்காகவும் மட்டும் முக்கியத்துவம் பெறவில்லை, இந்த நதி நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 40 சதவிகிதம் பேருக்கு வாழ்வளிப்பதாலும் முக்கியத்துவம் பெற்றதாகிறது.

கங்கை நதியின் பயணமானது, உத்தரகாண்ட் மாநிலத்தின் கர்வால் பகுதியிலுள்ள தேவ்பிரயாக் நகரில் பாகீரதி ஆறு மற்றும் அலக்நந்தா ஆறுகள் சேரும் இடத்தில் தொடங்குகிறது. உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம், ஜார்க்கண்ட் வழியாகப் பயணிக்கும் கங்கை நதியின் மொத்த நீளம் 2,525 கி.மீ. மேற்கு வங்காளத்தில் நுழைந்த பின்னர் நதியை மேக்னா என்று அழைக்கின்றனர்.

ஆறு! அதன் இயற்கையான பாதையில் நிற்காமல் ஓடிக்கொண்டேயிருக்க வேண்டும். ஆனால், மனிதத் தலையீடுகளால் கடல் நோக்கி ஓடும் ஆற்றை ஆங்காங்கே தடுத்து குட்டைகளாகத் தேங்கி நிற்க வைத்துவிட்டன. இவை நீரோட்டத்தைத் தடைசெய்வது மட்டுமல்லாது, பல லட்சம் உயிரினங்களின் வாழிடத்தைக் குப்பைக் குளங்களாகவும் தொழிற்சாலைக் கழிவுகளும் அன்றாட நகர்ப்புறக் கழிவுகளும் கொட்டும் இடங்களாக மாறிவிட்டன.

2019-20-ம் ஆண்டுக்குள் 20,000 கோடி ரூபாய் செலவில் நமாமி கங்கா திட்டத்தினை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. பல்வேறு அமைச்சகங்களின் ஒத்துழைப்புடன் மத்திய மாநில அரசுகளின் ஒருங்கிணைப்புடன் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இது தவிர 30 ஆயிரம் ஏக்கரில் காடு வளர்க்கும் திட்டமும் 2016ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

ஆனால், இன்று வரை கங்கை மாசுபடுதல் குறைந்தபாடில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவினால் நாட்டில் உள்ள தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்தநிலையில் கங்கையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலப்பது தவிர்க்கப்பட்டுள்ளதால், நதி நீர் மேம்பட்டுள்ளதாக, மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

ஊரடங்குக்கு முன் கங்கை நதி, குளிப்பதற்கு கூட தகுதியற்றதாக இருந்தது. தற்போது, நதி பாயும் தடத்தில், 36 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், 27 இடங்களில், குளிப்பதற்கும், நீர்வாழ் உயிரினங்கள் வாழ்வதற்கும் உகந்ததாக மாறியுள்ளது.

தன்னைத்தானே சரிப்படுத்திக் கொண்ட இயற்கை! ஆம், பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்தும் செய்ய முடியாத சுத்தப்படுத்தும் பணிகளை, மனிதர்கள் எதுவும் செய்யாமல் இருந்தாலே இயற்கையாக சுத்தமாக இருக்கும் என்பது வெளிப்படையாக தெரிகிறது.