கொரோனாவால் உயிரிழக்கும் அமெரிக்கர்கள்… இந்தியா உதவ வேண்டும் பிரதமர் மோடியிடம் டொனால்டு டிரம்ப் கோரிக்கை!

Read Time:5 Minute, 16 Second

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு 311,637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,454 பேர் உயிரிழந்துள்ளனர். 14,825 பேர் சிகிச்சையில் குணம் அடைந்து உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

கொரோனா வைரசுக்கு என பிரத்யேகமாக தடுப்பு மருந்து எதுவும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. மலேரியாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு உயி்ர்காக்கும் மருந்தாக மலேரியாவுக்கு வழங்கப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வழங்கலாம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதனையடுத்து இம்மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய மத்தியஅரசு கடந்த மாதம் 25-ம் தேதி தடை விதித்தது. இந்தியா கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிக்காத வகையில் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியாவிடம் மிகப்பெரிய அளவில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை வாங்க அமெரிக்கா ஆர்டர் செய்திருந்தது. மத்திய அரசு தடை காரணமாக அந்த மாத்திரைகள் அமெரிக்காவுக்கு கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடியிடம் தடையை விலக்கும்படி அதிபர் டொனால்டு டிரம்ப் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தபோதிலும் வர்த்தக ரீதியாகவே இது செல்லுபடியாகும். மனித நேய அடிப்படையில் சில நாடுகளுக்கு மத்திய அரசு அதனை வழங்கி வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உயிர்காக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அமெரிக்காவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மற்ற நாடுகளை நம்பி உள்ளது.

டொனால்டு டிரம்ப் கோரிக்கை!

இதுகுறித்து வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசுகையில், நான், இந்தியப் பிரதமர் மோடியுடன் சனிக்கிழமை காலை தொலைப்பேசியில் பேசினேன். இரு நாடுகளும் கொரோனா வைரஸை ஒழிப்பதில் ஒற்றுமையுடன் செயல்பட சம்மதித்து உள்ளோம். கொரோனா வைரைசில் பாதிக்கப்பட்ட நோயாளிகளை உயிர் காக்கும் மாத்திரையாக ஹைட்ராக்ஸி குளோரோகுயின் இருக்கிறது. இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவி்ல இந்தியாவிடம் ஆர்டர் செய்தது.

ஆனால், இந்தியாவில் அந்த மாத்திரைகளை ஏற்றுமதி செய்ய தடை விதித்தது. இதனால், அமெரிக்காவுக்கு மத்திரைகள் கிடைப்பதில் சிக்கல் இருக்கிறது. ஆதலால், அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள் கிடைக்க உதவ வேண்டும் என பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்து உள்ளேன். பிரதமர் மோடியும் தீவிரமாகப் பரிசீலிப்பதாக கூறியுள்ளார். அமெரிக்காவுக்கு ஆதரவாக உத்தரவுகளை தளர்த்தி இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதி செய்தால் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவோம்.

மலேரியாவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகள் அதிகமாக எடுக்கவேண்டும், ஆனால் கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்படாதவர்களுக்கு தேவையில்லை எனக் கூறியுள்ளார்.

அமெரிக்க மருத்துவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக்காக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் எனக் கூறியுள்ளனர். இந்த மாத்திரைகளும் நன்றாக பயன் அளிப்பதாக அதிபர் ட்ரம்பும் சமீபத்தில் ஊடகங்கள் மத்தியி்ல் தெரிவித்தார். இதனால் தான் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை கேட்டுப்பெற டொனால்டு டிரம்ப் ஆர்வம் காட்டுகிறார்.

தேவைப்பட்டால், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் நானும் உட்கொள்வேன் எனவும் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.