1 லட்சம் துரித ஆய்வு உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஆணை! ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? முதல்வர் பதில்..!

Read Time:3 Minute, 23 Second

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்த படி நேற்று (ஏப்ரல்-6) காணொலி காட்சி மூலம் ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கான மருந்துகள் தேவையான அளவிற்கு முழுமையாக கையிருப்பு உள்ளது. 1 லட்சம் துரித ஆய்வு (Rapid Test Kits) உபகரணங்கள் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டு உள்ளது இந்த ரேபிட் டெஸ்ட் கிட் கிடைத்தவுடன் விரைவாக, வேகமாக 1 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய முடியும். வருகிற 9-ம் தேதி அந்த ரேபிட் டெஸ்ட் கிட் கிடைக்கும். இதனை சீனாவில் இருந்து நாம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்திருக்கிறோம். கிட் கிடைத்தவுடன் எங்கெங்கெல்லாம் பரிசோதனை மேற்கொள்ள வேண்டுமோ எல்லா மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு பரிசோதனை விரைவாக செய்வதற்கு உதவும் என்றார்.

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?

ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? என்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கையில், வைரசினுடைய தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கிறது. இதை தடுப்பதற்கு ஒரே வழி நம்மை நாம் தனிமைப்படுத்தி கொள்வது மட்டும் தான். இந்த வைரஸ் பரவாமல் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இந்த வைரஸ் எளிதாக பரவக்கூடியது, இந்த வைரஸ் எவ்வாறு பரவுகிறது என்பதை ஊடகம் மற்றும் பத்திரிகை நண்பர்கள், தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் வாயிலாக மக்களுக்கு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழகத்தில் 7 பேர் குணமாகி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள். ஆனால், இன்றைய தினம் இந்த வைரஸ் தொற்றின் அறிகுறி தென்படாமலேயே அவர்கள் உடலில், வைரஸ் தொற்று ஏற்பட்டு விடுகிறது. சமீபத்தில் பரிசோதனை செய்ததில் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் அரசு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். தடை உத்தரவை கடுமையாக்குவதற்கு அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என கேட்கிறீர்கள்.

அரசு, மக்களையும் கஷ்டப்படுத்தக் கூடாது, அவர்களுக்கு எந்த தொந்தரவும் கொடுக்கக்கூடாது. அதே நேரத்தில், இந்த வைரஸ் பரவாமல் தடுக்கப்பட வேண்டும். மக்களை கஷ்டப்படுத்தி, துன்புறுத்தி இந்த தடை உத்தரவை அமல்படுத்துவது என்பது இயலாத காரியமாகும். சட்டத்தை நாம் போடலாம், ஆனால் அதை நடைமுறைப்படுத்த மக்கள் ஒத்துழைப்பு வேண்டும் எனக் கூறினார்.