இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் சொல்கிறது. 7.4 நாட்களில் எத்தனைபேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்ததோ, அத்தனை பேர் 4.1 நாளிலே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிப்பு, 4 நாளில் இரு மடங்காகி உள்ளதைக் காட்டுகிறது.
மத்திய சுகாதாரத்துறை இணைச்செயலாளர் லாவ் அகர்வால் டெல்லியில் அளித்த பேட்டியில் வெளியிட்ட புள்ளிவிவரம், நேற்றுமுன்தினம் (ஏப்ரல் -5) தொடங்கி நேற்று வரை (ஏப்ரல் -6 வரையில் 24 மணி நேரத்தில்) பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 700-ஐ எட்டி இருப்பதையும், பலியானவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்து வேகமாக சென்று கொண்டிருப்பதையும் காட்டுகிறது.
டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி இயக்குனர் ரன்தீப் குலேரியா, கொரோனா பாதித்தவர்கள் பற்றி கருத்து தெரிவிக்கையில், நாட்டின் சில பகுதிகளில் உள்ளூர் அளவிலான சமூக பரவல் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று 4,400 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 114 ஆக உயர்ந்து உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 354 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் இன்று மொத்த கொரோனா வைரஸ் நோயாளிகளின் எண்ணிக்கை 4,421 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதார அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசினால் இறப்பு எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது, 325 நோயாளிகள் வைரஸால் குணப்படுத்தப்பட்டு உள்ளனர். மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லி அதிகமாக பாதிக்கப்படுட்ள்ளது. மராட்டியத்தில் அதிக எண்ணிக்கையில் அதாவது 748 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. தமிழகத்தில் 621 பேருக்கும், டெல்லியில் 523 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
நேற்று திங்கள் கிழமை மத்திய அரசு வெளியிட்ட தகவலில் இந்தியாவில் பதிவான 1445 கொரோனா வைரஸ் பாதிப்புக்கள் டெல்லி இஸ்லாமிய மாநாட்டுடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டது.