#IndiaFightsCorona கொரோனாவுக்கு எதிராக நீண்ட போரை நாம் தொடங்கி இருக்கிறோம்… இதில் நாம் சோர்வு அடையவோ, தோல்வி அடையவோ கூடாது – பிரதமர் மோடி

பாரதீய ஜனதா கட்சியின் 40-வது நிறுவன நாளையொட்டி அக்கட்சியின் தொண்டர்களுடன் பிரதமர் மோடி நேற்று (ஏப்ரல் -6) பேசினார். அவர் பேசுகையில், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், வைரஸ் பரவுவதால் ஏற்படும் ஆபத்தை புரிந்து கொண்டு அதை ஒழிப்பதற்கான விரிவான நடவடிக்கைகளை எடுத்து உள்ளன. கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகள் உலகுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது. இந்தியா எடுத்து வரும் நடவடிக்கைகளை பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பாராட்டி உள்ளனர். உலக சுகாதார அமைப்பும் பாராட்டி உள்ளது.

கொரோனா வைரசால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க முககவசம் அணியாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று வலியுறுத்தி கூறியிருக்கிறோம். வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது பற்றியும் விளக்கி இருக்கிறோம். வெளிநாடுகளில் சிக்கிய இந்தியர்களை அழைத்து வந்த போது அவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை உள்ளிட்டவற்றை மேற்கொண்டு இருக்கிறோம்.

சில நாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கு உடனடியாக தடை விதிக்கப்பட்டது. நோயை கண்டறிந்து கட்டுப்படுத்துவதற்கு தேவையான மருத்துவ உபகரணங்களையும் தயாராக வைத்து உள்ளோம். நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று மாநிலங்களின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறோம். கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக சார்க் நாடுகள் மற்றும் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசித்ததில் இந்தியாவின் பங்கு முக்கியமானது. கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தல் விஷயத்தில் பல்வேறு நாடுகளுடனும் இணைந்து இந்தியா செயல்படுகிறது. சில நாடுகளின் தலைவர்களை நான் தொடர்பு கொண்டு பேசி வருகிறேன்.

பெருந்தொற்று நோயான கொரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அங்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். கொரோனாவுக்கு எதிராக நீண்ட போரை நாம் தொடங்கி இருக்கிறோம். இந்த போரில் நாம் சோர்வு அடையவோ, தோல்வி அடையவோ கூடாது என்று நான் மக்களை கேட்டுக்கொள்கிறேன். இந்த போரில் நாம் வெற்றி பெற்றே ஆகவேண்டும்.

கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் நாம் அமல்படுத்தி இருக்கும் 21 நாள் ஊரடங்கு இதற்கு முன்பு எப்போதும் நடைபெறாத ஒன்றாகும். இந்த காலகட்டத்தில் நாட்டு மக்கள் மிகுந்த பக்குவத்துடன் நடந்து கொள்கிறார்கள். இந்தியா போன்ற ஒரு மிகப்பெரிய நாட்டில் மக்கள் இப்படி பொறுப்புடனும், கட்டுப்பாட்டுடனும் நடந்து கொள்வது யாராலும் கற்பனை செய்துகூட பார்க்க முடியாத விஷயமாகும். கொரோனாவை ஒழிப்பதில் தங்கள் ஒற்றுமையை காட்டும் வகையில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் மின்விளக்குகளை அணைத்துவிட்டு அகல், மெழுகுவர்த்திகளை ஏந்தி நின்றார்கள்.

செல்போன் டார்ச் லைட்டுகளையும் ஒளிரச் செய்தனர். இது, இந்தியர்களை நீண்ட போருக்கு தயார்படுத்தி இருப்பதை காட்டுகிறது. ஏழை, பணக்காரர், படித்தவர், படிக்காதவர், சிறுவர்கள் மற்றும் பெரியார்கள் என சமுதாயத்தில் அனைத்து தரப்பினரும் ஒன்று சேர்ந்து 130 கோடி இந்தியர்களின் ஒட்டுமொத்த வலிமையையும் காட்டி இருக்கிறார்கள். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்த ஒற்றுமை உணர்வு நமக்கு மேலும் பலத்தை கொடுக்கும்.

இந்த காலகட்டத்தில் யாரும் பசியால் வாடிவிடக்கூடாது. அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் முககவசம் போன்றவை கிடைப்பதை பாரதீய ஜனதா கட்சியினர் உறுதி செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் ஒழிப்பு தொடர்பாக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் பிரதமரின் நிவாரண நிதிக்கு தொண்டர்கள் நன்கொடை வழங்க வேண்டும். இதேபோல், நன்கொடை வழங்க மற்றவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.

Next Post

#IndiaFightsCorona இந்தியாவில் பாதிப்பு 4 நாளில் இரு மடங்கானது... 4,421 பேர் பாதிப்பு, 114 பேர் உயிரிழப்பு...

Tue Apr 7 , 2020
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 4 நாட்களில் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக புள்ளி விவரம் சொல்கிறது. 7.4 நாட்களில் எத்தனைபேர் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று கணிக்கப்பட்டிருந்ததோ, அத்தனை பேர் 4.1 நாளிலே பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. வைரஸ் பாதிப்பு, 4 நாளில் இரு மடங்காகி உள்ளதைக் காட்டுகிறது. மத்திய சுகாதாரத்துறை […]

அதிகம் வாசிக்கப்பட்டவை