கொரோனா தடுப்பூசியை ஆப்பிரிக்க மக்கள் மீது சோதிப்பதற்கு உலக சுகாதார அமைப்பு கடும் எதிர்ப்பு!

Read Time:4 Minute, 8 Second

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி மக்களின் உயிரை குடித்து வருகிறது.

மனித குலத்தை மிரட்டும் கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் விஞ்ஞானிகள் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சிலர் கண்டுபிடிக்கப்பட்டது என தெரிவித்தாலும் அது இன்னும் பரிசோதனை முயற்சியில் மட்டுமே இருக்கிறது. முழுமையாக தடுப்பூசி மருந்துகள் மனிதர்களுக்கு கிடைக்க இன்னும் 18 மாதங்கள் வரையில் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் ஜெனிவாவில் நேற்று (ஏப்ரல் -6) செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உலக நாடுகள் தங்கள் நாட்டு மக்களை முகக்கவசம் அணிந்து கொள்ளுங்கள் என்ற அறிவுரையை தீவிரப்படுத்த வேண்டும். மற்ற கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளான கைகளை சுத்தம் செய்தல் மற்றும் சமூக விலகலை கடைப்பிடித்தல் என்பது கடினமானது.

ஏனென்றால், சில நாடுகளில் தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருக்கும், அல்லது வாழும் சூழல் மோசமாக இருக்கும் அங்கெல்லாம் இரு விஷயங்களை தீவிரமாக செயல்படுத்த முடியாத நிலையிருக்கும். மருத்துவர்கள் பயன்படுத்தும் முகக்கவசம் மற்றும் மருத்துவப்பணிகளுக்கு பயன்படுத்த தேவையில்லாத முகக்கவசங்களை கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக பயன்படுத்த சில நாடுகள் மக்களுக்கு பரிந்துரைத்து உள்ளன.

அனைத்து மக்களும் முகக்கவசங்களை பயன்படுத்த தொடங்கி இருப்பதால் மருத்துவத்துறையில் சுகாதாரப்பணியில் இருக்கும் ஊழியர்கள், பணியாளர்களுக்கு முக்கவசம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. மருத்துவ முகக்கவசங்களை மருத்துவப்பணியாளர்கள் தவிர்த்து கொரோனா நோய் தொற்று உடையவர்கள் பயன்படுத்தலாம். சில இனவெறி (பிரான்ஸ் ஆய்வாளர்கள் இருவர்) பிடித்த ஆராய்ச்சியாளர்கள் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்துகளை ஆப்பிரிக்க மக்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்க ஆலோசனை தெரிவித்து உள்ளார்கள்.

ஆப்பிரிக்க மண்ணும், அங்குள்ள மக்களும் ஒருபோதும் கொரோனா வைரசுக்கான தடுப்பூசி மருந்துகளை பரிசோதனை செய்யும் கூடமாக இருப்பதை அனுமதிக்க முடியாது. ஒரு தடுப்பூசியை பரிசோதிக்க உலக சுகாதார அமைப்பு என்ன வழிமுறைகளை, விதிமுறைகளை கடைபிடிக்க கூறியுள்ளதோ அதனை உலக நாடுகள் கடைபிடிக்க வேண்டும். அது ஆப்பிரிக்காவாக இருந்தாலும், ஐரோப்பிய நாடுகளாக இருந்தாலும் சரி விதிமுறைகள் எல்லோருக்கும் ஒன்றாகும்.

முதலில் அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் இதுபோன்ற ஏதேச்சதிகார மனப்பாங்கை நிறுத்திக்கொள்ள வேண்டும். ஆப்பிரிக்க மக்கள் மீது தடுப்பூசிகளை பரிசோதி்க்கும் ஆலோசனைகள் என்பது இனவெறி பிடித்தவார்த்தைகள், இதை கடுமையாக எதிர்க்கிறோம், கண்டனம் தெரிவிக்கிறோம். அதுபோன்ற தடுப்பூசிகளை ஆப்பிரிக்க மண்ணில் மட்டுமல்ல எந்த நாட்டிலும் பரிசோதிக்கவும் அனுமதிக்கமாட்டோம். மனிதர்களை மனிதர்களாக நடத்த வேண்டும், அதேபோல நடத்தப்பட வேண்டும் எனக் கூறினார்.