#Coronavirus கொரோனாவுக்கு பயனளிக்கும் என டிரம்ப் பிரசாரம் செய்யும் மருந்து ‘பார்வை இழப்பு முதல் மூளை பாதிப்பு வரை’ கடும் விளைவுகளை ஏற்படுத்தும்…!

Read Time:7 Minute, 4 Second

பார்வை இழப்பு முதல் மூளை பாதிப்பு வரையிலான பக்க விளைவுகளை கொண்ட மலேரியா எதிர்ப்பு மருந்து கொரோனாவிற்கு பலனிக்கும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பிரசாரம் செய்கிறார்.

மருத்துவ ஆய்வினால் அறியப்படாத போதிலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் பயனளிக்கிறது என்று பிரசாரம் செய்து வருகிறார்.

சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சையளிப்பது என்பது குறித்து மருத்துவர்கள் எந்தஒரு குழுவும் இல்லாமல் இருந்தனர். அதிக காய்ச்சல் காரணமாக பல்வேறு மருந்துகளை எடுக்க முயற்சித்தனர். உயிரிழப்புக்கு எதிராக மலேரியா எதிர்ப்பு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகள் மற்றும் எச்.ஐ.வி நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்ட மருந்துகளையும் பயன்படுத்தினர்.

நோயாளிகளின் உயிரை காப்பாற்ற வேண்டும் என்று சீனர்கள் ஒவ்வொரு மருந்தையும் பயன்படுத்தினர். இந்த மருந்தினால் கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில் சீனா, தென் கொரியா, பிரான்ஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவிலும் (குறிப்பாக பில்வாராவில்) சில வெற்றிகள் பதிவாகியுள்ளது. ஆனால், உலகளவில் சுகாதார வல்லுநர்கள் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றுக்கு சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் தொடர்ந்து பயன்படுத்துவதை எதிர்த்து எச்சரித்துள்ளனர்.

இதற்கான காரணம் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பக்கவிளைவுகள் முக்கியமாக பார்க்கப்படுகிறது. இது, கொரோனா நோயாளிகளை விரைவாக மீட்க உதவியிருக்கலாம், ஆனால் மருந்து சில கடுமையான பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அறியப்படுகிறது. ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அடிக்கடி பயன்படுத்தப்படுவதை எதிர்த்து எச்சரித்த ஏஜென்சிகளில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் (யு.எஸ்.எப்.டி.ஏ) உள்ளது. அதனுடைய இணையதளத்தில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும் பட்டியலிடுகிறது.

இவை மீளமுடியாத விழித்திரை சேதம் (பார்வை இழப்பு), லூபஸ் எரித்மாடோசஸ் (நோயெதிர்ப்பு அமைப்பு உடல் திசுக்களை தாக்க தொடங்கும் ஒரு அழற்சி நோய்), இதயம் தொடர்பான வியாதிகள், தசைகளில் பலவீனம், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல், தூக்கமின்மை, பிரமைகள் மற்றும் கடுமையான மனச்சோர்வு தற்கொலை போக்குகளுக்கு வழிவகுக்கிறது. நீரிழிவு அல்லது கால்-கை வலிப்பு உள்ளவர்களுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் அதிக பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இது நல்லதல்ல என பட்டியலிடப்பட்டுள்ளது.

டிரம்ப் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பக்க விளைவுகள் பற்றி தெரியாமல் இருந்து இருக்கலாம். ஆனால் தொடர்ந்து அதனை பயன்படுத்தலாம் என அவர் பிரசாரம் செய்து வருகிறார். இதனை அமெரிக்க மீடியாக்களும் விமர்சனம் செய்கின்றன. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் மிகவும் இக்கட்டான நிலையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை பயன்படுத்தலாம் என அறிவுரை வழங்கியுள்ளது. ஆனால், இதனை கொரோனாவிற்கு பயன்படுத்தலாமா? என்பது தொடர்பாக அந்த அமைப்பு அறிவியல்பூர்வமான ஆய்வை மேற்கொள்ளவில்லை.

அமெரிக்காவில் சுகாதார நிபுணர்களின் கருத்தை புறக்கணித்ததாக டிரம்ப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. டிரம்ப் மலேரியா மாத்திரைகள் பயனளிக்கும் என பத்திரைக்கையாளர்களிடம் பேசிய போது அவருடைய நிர்வாகத்தின் உயர்மட்ட மருத்துவ ஆலோசகர்களில் ஒருவரான அந்தோணி எஸ் பவுசி, ஹைட்ராக்ஸிகுளோரோகுயினுக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

உலக சுகாதார அமைப்பும் (WHO) குளோரோகுயின் உள்ளிட்ட மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து எச்சரிக்கிறது. மலேரியாவுக்கு சிகிச்சையளிப்பதற்கான ஒரு வழக்கமான மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயினை கொரோனாவிற்கு பயன்படுத்த இது பரிந்துரைக்கவில்லை.

குயினிசம் அறக்கட்டளை (Quinism Foundation) குளோரோகுயின் உள்ளிட்ட மருந்துகளின் பக்கவிளைவுகள் குறித்து விழிப்புணர்வை பரப்புவதற்காக வேலை செய்கிறது. சமீபத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா எதிர்ப்பு மருந்தைப் பயன்படுத்துவது குறித்து எச்சரித்தது. மலேரியா எதிர்ப்பு மருந்துகளின் பக்க விளைவுகளில் நரம்பியல் மனநல விளைவுகள் அடங்கும், மேலும் மீளமுடியாத மூளை பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று அந்த அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதற்கிடையே கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையில் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன்படுத்துவதன் மூலம் கலவையான வெற்றியை ஆவணப்படுத்தியிருந்தாலும், அவை மிகவும் பயனுள்ள மருந்து கிடையாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுவருகிறது.

பிரெஞ்சு பத்திரிகையொன்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கடுமையான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் (மலேரியா எதிர்ப்பு மருந்து இணைந்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மருந்து) ஆகிய கலவையை கொண்ட மருத்துவ நன்மை விளைவிப்பதாக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.