இந்தியா முழுவதும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்த வண்ணமே உள்ளது. மராட்டியம், தமிழகம் மற்றும் டெல்லி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
1,135 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்புடன் மராட்டிய மாநிலம் மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதியதாக 540 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா வைரஸ் வழக்குகள் 5,734 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உயர்ந்துள்ளது. இதுபோன்று 472 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர். மராட்டிய மாநிலத்தில் 1,135 பேருக்கும், தமிழகம் 738 பேருக்கும், டெல்லி 669 பேருக்கும், தெலுங்கானா 427 பேருக்கும், ராஜஸ்தான் 381 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டாலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசுக்கு மாநில அரசுக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. இவ்விவகாரம் தொடர்பாக மாநில முதல்வர்களுடன் சனிக்கிழமையன்று பிரதமர் மோடி ஆலோசனையை மேற்கொள்கிறார்.