கொரோனா வைரஸ் விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனத்துக்கு டிரம்ப் மிரட்டல் ஏன்…?

Read Time:6 Minute, 30 Second

கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்தியால் உலக சுகாதார நிறுவனத்துக்கு வழங்கும் நிதியை நிறுத்தப் போவதாக அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் சீனாவில் உருவாகி உலகம் முழுவதும் பரவியுள்ளது. வைரஸ் பரவல் தொட்ங்கியதிலிருந்து உலக சுகாதார நிறுவனத்துக்கும், அமெரிக்காவுக்கும் இடையே மோதலான போக்கு நிலவுகிறது. உலக சுகாதார நிறுவனம் மீது கடும் அதிருப்தியில் உள்ள அமெரிக்கா, சீனாவுக்கு முற்றிலும் சாதகமாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக குற்றம் சாட்டுகிறது.

உலக சுகாதார அமைப்புக்கு அதிக நிதி வழங்கி வருவது அமெரிக்கா தான் என்பது முக்கியமானது.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனாடு டிரம்ப் செவ்வாய் கிழமை (ஏப்ரல் -7) வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் ஒருதலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனத்துக்கு செலவழிக்கும் பணத்தை நிறுத்தப்போகிறோம். நான் அதனை நிறுத்தப் போகிறேன் என்று சொல்லவில்லை. நிதி அளிப்பதை நிறுத்தும் முடிவுக்கு வருவோம் என்றுதான் கூறுகிறேன் என கூறினார்.

அதற்கு முன்னதாக டுவிட்டரில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார நிறுவனம் செயல்படுவதாக பகிரங்கமாக டொனால்டு டிரம் குற்றம் சாட்டினார்.

அவர் வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், உலக சுகாதார நிறுவனம் ஒரு தலைப்பட்சமாக சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருவதுதெரிகிறது. உலக சுகாதார நிறுவனம் எதற்காக தவறான பரிந்துரையை வழங்கியது…? (சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக சர்வதேச பயணங்களை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்யாததை குறிப்பிட்டார்.) அதிர்ஷ்டவமாக எங்கள் எல்லைகளை ஆரம்பத்தில் சீனாவுக்காக திறந்து வைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய யோசனையை நிராகரித்துவிட்டேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

https://twitter.com/realDonaldTrump/status/1247540701291638787

கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் டொனால்டு டிரம்பின் நிதி நிறுத்தம் தொடர்பான மிரட்டல் சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

இதனையடுத்து கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என அமெரிக்காவுக்கு பதிலடியை உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டிரம்ப்பின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்து நேற்று (ஏப்ரல் -8) உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் பேசுகையில், உலகம் முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளை நான் கேட்டுக்கொள்வதெல்லாம் உங்கள் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதுதான். தயவுசெய்து கொரோனா விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். நீங்கள் அதிகமான சவப்பெட்டிகளை உங்கள் தோளில் சுமக்க விரும்பவில்லை என்றால் கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் அரசியல் செய்யாதீர்கள். இது நெருப்புடன் விளையாடும் விளையாட்டாகும் எனக் கூறியுள்ளார்.

இதற்கும் டொனால்டு டிரம்ப் பதிலடியை கொடுத்துள்ளார். டெட்ராஸ் அதானம் பேட்டியை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டொனால்டு டிரம்ப், கொரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் நாங்கள் அரசியல் செய்யவில்லை. உலக சுகாதார அமைப்புதான் அரசியல் செய்து சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. நாங்கள் நிதியை நிறுத்தப்போகிறோம் என்று ஆவேசமாக பேசினார்.

டொனால்டு டிரம்ப் பேசுகையில், கடந்த ஆண்டு நாங்கள் 45 கோடி டாலர் உலக சுகாதார அமைப்புக்காக செலவு செய்துள்ளோம். அதற்கு முன்னதாக லட்சக்கணக்கிலான டாலர்களை செலவு செய்திருக்கிறோம். நாங்கள் வழங்கிய நிதியை பயன்படுத்தி நன்றாக செயல்பட்டார்கள். ஆனால், அரசியலை பற்றி பேசும் போது மட்டும் சீனாவுடன் உறவு வைத்துக்கொண்டு நீங்கள் அரசியல் பற்றி பேசுவதை நம்ப முடியாது. சீனா 4.20 கோடி டாலர்தான் உலக சுகாதார அமைப்புக்காக செலவிட்டு உள்ளது.

ஆனால், நாங்களோ 45 கோடி டாலர் செலவிட்டுள்ளோம். இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு சீனாவுக்கு ஆதரவாக இருக்கிறது. இது சரியானது கிடையாது. இது நியாயமானதாக எங்களுக்கு தெரியவில்லை. நேர்மையாக சொல்கிறேன், உலகத்துக்கும் இது நியாயமானது கிடையாது. உலக சுகாதார அமைப்பு தங்களுக்கு இருக்கும் சிறப்பு உரிமைகளை பயன்படுத்தனாலும் அனைவரையும், அனைத்து நாடுகளையும் சமமாக நடத்த வேண்டும்.

ஆனால் அதுபோன்று நடத்தியதாக எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பது தொடர்பாக சில முடிவுகள் எடுக்கப்போகிறோம். அமெரிக்கா மட்டும் அதிகமான நிதி செலவிடும். மற்ற நாடுகள் குறைவாக நிதி செலவிடுவது சரியானது இல்லை என பேசியுள்ளார். அமெரிக்கா மற்றும் உலக சுகாதார அமைப்பு இடையிலான மோதல் தொடர்ந்து உச்சம் அடைந்து வருகிறது.