#IndiaFightsCorona முட்டிக்கொள்ளும் டிரம்ப்…! உலக சுகாதார அமைப்பின் சில ஆலோசனைகளை இந்தியா அமைதியாக ஓரங்கட்டியது எப்படி…?

Read Time:6 Minute, 45 Second

சீனாவின் உகான் நகரில் 2019 டிசம்பரில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இன்று உலகம் முழுவதும் பரவி 90 ஆயிரம் பேரின் உயிரை குடித்துவிட்டது. 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இன்று வரையில் வைரசின் தாக்கம் குறையவில்லை.

இந்நிலையில் கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவிற்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாக டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார். அவருடைய முக்கியமான குற்றச்சாட்டு, கொரோனா வைரஸ் பரவலின் போது சீனாவிற்கு செல்ல வேண்டாம் என போக்குவரத்து தடை அறிவுரையை வெளியிடாதது ஏன்…? என்பதாகும்.

அதிர்ஷ்டவமாக எங்கள் எல்லைகளை ஆரம்பத்தில் சீனாவுக்காக திறந்து வைக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறிய யோசனையை நிராகரித்துவிட்டேன் என்றும் டிரம்ப் கூறுகிறார்.
இவ்விவகாரம் தொடர்பாகதான் இப்போது உலக சுகாதார அமைப்புடன் டொனால்டு டிரம்ப் முட்டிக்கொண்டு வருகிறார். ஆனால், அமெரிக்காவில் கொரோனா பரவ தொடங்கியதுமே அவர் ஊரடங்கு போன்ற நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. இப்போது பிறர் மீது குற்றம் சாட்டும் நடவடிக்கையை மேற்கொள்கிறார். ஆனால் இவ்விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பின் சில ஆலோசனைகளை இந்தியா அமைதியாக ஒதுக்கி வைத்துவிட்டது என்பதை பார்க்கலாம்.

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு மாநில அரசுக்களுடன் இணைந்து பணியாற்ற தொடங்கியது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் ஏற்கனவே நிபா மற்றும் கொரோனா வைரஸ் பாதிப்பில் வெற்றியை கண்ட கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் அனுபவங்களுடன் பணியாற்ற தொடங்கியது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதும் அங்கிருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணியில் இந்திய அரசு வெற்றிகரமாக செயல்பட்டது.

கேரளாவில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்றனர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் கண்காணிக்கப்பட்டனர்.

ஜனவரி 30 அன்று உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ராஸ் அதானம் கெப்ரியேசஸ் பேசுகையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சீனாவுக்கு பயண கட்டுப்பாடுகளை பரிந்துரைக்கவில்லை என்றார். உண்மையில், பயண கட்டுப்பாடு என்ற நடவடிக்கைக்கு எதிராக உலக சுகாதார அமைப்பு இருந்தது. அதேநாளில் உலக சுகாதார அமைப்பின் சர்வதேச சுகாதார ஒழுங்குமுறை அவசரக் குழு கொரோனா வைரசை கட்டுப்படுத்த கண்காணிப்பு, கண்டறிதல், தனிமைப்படுத்துதல் மற்றும் தொடர்பு தொடர்பான தகவல்களை அறிதல் போன்றவை குறித்து உலகளாவிய எச்சரிக்கையை எழுப்பியது.

இந்த நேரத்தில் இந்தியாவில் சீனாவுக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்ப்பது குறித்தான அறிவுரை அமலில் இருந்தது. இந்தியா ஜனவரி 25-ம் தேதியே இம்முறையை நடைமுறைப்படுத்தியது. தற்போது, அமெரிக்காவில் இவ்வளவு அளவிற்கு கொரோனா வைரஸ் பரவ சீனாவிலிருந்து சென்றவர்களை கவனிக்காததுதான் என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது.

மார்ச் 16-ம் தேதியோ டெட்ராஸ் அதானம் கொரோனா வைரஸ் தொடர்பாக பரிசோதனை செய்யுங்கள், அதனை தொடருங்கள் என்றார். ஆனால், மார்ச் 22-ம் தேதி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைவர் பல்ராம் பார்கவா, கண்மூடித்தனமான சோதனைகள் இருக்காது. தனிமைப்படுத்தல் அவசியம் என்றார். இந்தியாவில் 75 மாவட்டங்களில் தொடங்கிய ஊரடங்கு மார்ச் 24 நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது. விமான நிலையங்களை கண்காணிப்பதை காட்டிலும் தனிமைப்படுத்தல் வைரஸை கட்டுப்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழியாகும் என்று ஐ.சி.எம்.ஆர். ஆய்வின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரம் தாண்டியது. ஆனால் பரிசோதனை விவகாரத்தில் தனித்துவமான நடவடிக்கையை மட்டுமே பின்பற்றுகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்ட நாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். இங்கு கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் மற்றும் அவர்களுக்கு சிகிச்சை அளித்த மருத்துவ ஊழியர்கள் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என சங்கிலித்தொடர் போன்று கொரோனா நோயாளின் பயண விபரம் மற்றும் பிறருடனான தொடர்பின் அடிப்படையில் தனிமைப்படுத்தல் மற்றும் பரிசோதனைகள் நடக்கிறது.

இதுபோன்று கொரோனாவிற்கு மருந்தை பயன்படுத்தும் விவகாரத்திலும் உலகச் சுகாதார அமைப்பின் பரிந்துரையிலிருந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் பரிந்துரைகள் மாறுபடுகிறது.

மார்ச் 26-ம் தேதியன்று கொரோனா வைரசை கையாள்வதற்கான ஜி -20 நாடுகளிடன் தலைவர்க்ளிடம் பேசுகையில், உலக சுகாதார அமைப்பு போன்ற அமைப்புகளை வலுப்படுத்தி சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டு காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரசுக்கு எதிராக போராடிவரும் இந்தியா சரியான திசையில் செல்கிறது என உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.