இந்தியாவில் மராட்டியத்திற்கு அடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வருகிறது. கடந்த 1-ம் தேதியிலிருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. கடந்த 3 நாட்களில் 213 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், 485 பேரின் சளி மற்றும் ரத்த பரிசோதனை மாதிரிகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 96 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 834 ஆக உயர்ந்துள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் 59 ஆயிரத்து 918 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் 9-ம் தேதி (நேற்று) ஒரே நாளில் மட்டும் 96 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 84 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். 3 பேர் வெளி மாநிலங்களுக்கு சென்று வந்தவர்கள். மேலும் ஒரு தனியார் ஆஸ்பத்திரி டாக்டர் உட்பட 9 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர்.
தமிழகத்தில் மொத்தம் 34 மாவட்டத்தில் தொற்று நோய் கட்டுப் படுத்துதல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாவட்டங்களில் 16 லட்சத்து 61 ஆயிரத்து 487 வீடுகளில் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த வீடுகளில் இருந்த 58 லட்சத்து 77 ஆயிரத்து 348 பேருக்கு முதற்கட்ட பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த கட்டுப்படுத்துதல் திட்ட சோதனையில் இதுவரை 6 பேர் அறிகுறியுடன் இருந்தது தெரியவந்துள்ளது. நேற்று எந்த ஒரு உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை சிகிச்சை பெற்ற 27 பேர் நலமுடன் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 762 பேர் டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.