கொரோனாவால் பெரும் பாதிப்பு…. செடிகளை அழிக்கும் பூ விவசாயிகள்…!

Read Time:4 Minute, 14 Second

கொரோனாவினால் பெரிதும் பாதிக்கப்பட்ட பூ விவசாயிகள் செடிகளை அழிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொரொனா பரவலை தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தவிர்க்க விழாக்கள் நிறுத்தப்பட்டு உள்ளது. பங்குனி, சித்திரை மற்றும் வைகாசி ஆகிய தமிழ் மாதங்களில் தமிழகம் முழுவதும் முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்நாட்களில் பூ விவசாயிகள் பயன் அடைவார்கள்.

தற்போது ஊரடங்கு காரணமாக பூ மார்க்கெட் இயங்காதது, வாகன போக்குவரத்து இல்லாததால் மலர்ந்த பூக்களை பறித்து மார்க்கெட்டிற்கு கொண்டுசெல்ல முடியவில்லை. விழாக்கள் இல்லையென்பதால் விலையும் கிடையாது. பலர் பூக்களை பறிக்கும் கூலி கூட கட்டாது என்பதால் செடியிலேயே விட்டுவிட்டனர். தமிழகம் முழுவதும் இதுபோன்ற நிலைதான் இருக்கிறது.

தற்போதைய நிலையில் பூச்செடிகள் பயிரிட்டுள்ளவர்கள் முதல் கூலித்தொழிலாளர்கள் வரை அனைவரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். செடியில் பூக்கள் பூத்து குலுங்குகின்றன. செடியிலேயே கருகிவிடுகிறது. இவற்றிற்கு செலவு செய்த தொகையை கூட எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பூக்களை பறித்து கால்நடைகளுக்கு தீவினமாக போடும் நிலை ஏற்பட்டுள்ளது. மல்லி, சம்பங்கி, செண்டு மல்லி என அனைத்து விதமான பூக்களுமே செடியில் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம், பாவூர்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பூ பயிரிடுவது அதிகமாகும். இப்போது பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் செண்டுமல்லி செடிகளை அழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில் முதலில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. எல்லையில் போக்குவரத்து தடையானது. இதனால் செண்டுமல்லி விலை ரூ. 5 ஆக குறைந்தது. பின்னர் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் செடியிலே பூத்து குலுங்கி கருக தொடங்கின. இப்போது செடிகளை அழிக்க தொடங்கியுள்ளன. விவசாயிகளுக்கு பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

இவற்றை அரசே கொள்முதல் செய்து நறுமண தொழிற்சாலைகளுக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யவேண்டும் என்கின்றனர்.

விவசாயியொருவர் பேசுகையில், ஒரு செண்டுமல்லி (கேந்தி) நாற்று ரூ. 2.50 என்று 7000 நாற்றுகளை வாங்கி நடுவை செய்திருந்தோம். 40 நாட்கள் பராமரித்து பூ வெட்டுவதற்கு தயாரானது. முதலில் கேரளாவிற்கு செல்ல தடையென்றதும் விலை குறைந்துவிட்டது. திருவிழா காலமான பங்குனி, சித்திரை, வைகாசியை கணித்தே நாங்கள் செண்டு மல்லி பயிரிடுவோம். தற்போது விழாக்களும் இல்லை, பூக்களை வெட்டவும் முடியவில்லை. அவைகள் செடியிலே கருகுகிறது. பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளோம் என கூறியுள்ளார். சிலர் செடிகளை அழித்துவிட்டனர் எனவும் குறிப்பிடுகிறார்.

இதற்கிடையே சில விவசாயிகள் அரசு இழப்புக்கு நிவாரணம் வழங்கலாம் என்கிறனர். சிலர், அரசு உண்மை நிலையை ஆய்வு செய்து. பாதிக்கப்பட்ட விவசாயிக்கு ஆதார் மூலமாக நிதி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும். மற்றபடி, முழுமையாக விவசாயிகளை சென்றடையாத நிவாரணம் தேவையில்லை என்கின்றனர்.