கொரோனா தடுப்பு நிதி: அள்ளிக் கொடுத்த தமிழகத்தை சேர்ந்த டி.வி.எஸ். மற்றும் ஜோஹோ(ZOHO) நிறுவனங்கள்..!

Read Time:3 Minute, 19 Second

இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அறிவித்திருப்பதால், அத்தியாவசியப் பணிகளைத் தவிர மற்ற அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கான மருத்துவ செலவுகள் என பல்வேறு நிதிச் சிக்கல்களில் தற்போது இந்தியா உள்ளது.

இதனையடுத்து பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விடுபட குடிமக்கள் தங்களால் இயன்ற நிதியுதவி அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்காக PM Cares Relief Fund என்னும் வங்கி கணக்கை அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து தொழிலதிபர்கள், நடிகர்கள் முதல் சாதாரண குடிமக்கள் வரை தங்களால் இயன்ற நிதியை அளித்து வருகிறார்கள்.பிரதமரின் நிதி உதவி கணக்கிற்கு நாடு முழுவதும் உள்ள 28 கல்வி நிறுவனங்கள், தன்னாட்சி அமைப்புகள், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் பல்வேறு துறைகள் ஆகியவை ஒன்றிணைந்து ரூ.38.91 கோடிக்கு மேலான தொகையை வழங்கியுள்ளன.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனது சேமிப்பிலிருந்து ரூ.25 கோடியை பிஎம் கேர்ஸ் நிதிக்கு வழங்கினார். நடிகர் வருண் தவான் ரூ.30 லட்சமும் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவும் ரூ.31 லட்சம் வழங்குவதாகவும் உறுதியளித்தார்கள்.

மேலும் கார்பரேட் நிறுவனங்கள் பல தங்களால் முடிந்த நிதியுதவியை வழங்கி வருகின்றன. டாடா நிறுவனம் ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. டாடா அறக்கட்டளை தன் பங்குக்கு ரூ.500 கோடி வழங்குவதாக ரத்தன் டாடா தெரிவித்துள்ளார். மேலும் மும்பை பங்குச் சந்தை குழு ரூ.2 கோடியும், வேதாந்தா நிறுவனம் ரூ.101 கோடியும் வழங்குவதாக அறிவித்தன.

இந்தியாவில் மோட்டார் சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் திகழும் தமிழகத்தை சேர்ந்த டி.வி.எஸ் நிறுவனம் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு ரூ.30 கோடி வழங்கியுள்ளது.

தற்போது தமிழகத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஜ.டி. நிறுவனம் ஜோஹோ (ZOHO) ரூ.25 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இதனை இந்நிறுவனத்தின் தலைவர் திரு. ஸ்ரீதர் வேம்பு அவர்கள் ட்விட்டரில் ஜோஹோ நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் எங்களுடைய வாடிக்கையாளர்களால் தான் இது சாத்தியமாயிற்று என தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலும் பொது நலம் கருதி பல்வேறு அமைப்புகளும், நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவி அளித்து வருகிறார்கள்.