இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் நோக்கில் ஊரடங்கை பிரதமர் மோடி மே 3-ம் தேதி வரையில் நீட்டித்து உள்ளார். இதனை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவு என்று உலக சுகாதார அமைப்பு புகழாரம் சூட்டியுள்ளது.
உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் மண்டல இயக்குநர் மருத்துவர் பூனம் கேத்ராபால் சிங் இதுபற்றி பேசுகையில், கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடி ஊரடங்கை 2-வது முறையாக நீட்டித்தது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட கடினமான முடிவாகும். இப்போது எண்ணிக்கையை பற்றி பேசுவது இயலாது.
ஆனால், பிரதமர் மோடியின் 6 வார ஊரடங்கு நடவடிக்கை நிச்சயம் பலன் அளிக்கும். மக்களிடையே சமூக விலகல், சுகாதார நடவடிக்கை, நோயாளிகளை கண்டறிதல், பின்தொடர்தல், தொடர்புள்ளவர்களை கண்டுபடித்தல் போன்றவை மூலம் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தலாம். மிகப்பெரிய பன்முகச் சவால்கள் இருந்தாலும், கொரோனா வைரசுக்கு எதிரான போரில் இந்தியா முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு போராடி வருகிறது.
இந்த சோதனையான காலத்தில் அதிகாரிகளும், சுகாதாரப் பணியாளர்களுடன் மக்களும் ஒத்துழைக்கிறார்கள். இந்த நேரத்தில் ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்து, ஒருங்கிணைந்து கொரோனா வைரசை தோற்கடிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.