இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் முதல் கட்டமாக 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஊரடங்கு நேற்று ஏப்ரல் 14-ம் தேதியுடன் முடிவுக்கு வந்தது.
ஏப்ரல் 14-க்கு பின்னர் ரெயில் சேவைகள் தொடங்கும் என பலரும் ரெயில் டிக்கெட்களை புக் செய்தனர். ஆனால், கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் குறையாததால் ஊரடங்கு மே 3-ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதுவரையில் பயணிகள் ரெயில் இயங்காது என ரெயில்வே நிர்வாகமும் அறிவித்தது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவால் முன்பதிவு செய்யப்பட்டிருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்கிறது.
ஏப்ரல் 15-ம் தேதி முதல் மே 3-ம் தேதி வரை பயணிகள் முன்பதிவு செய்திருந்த 39 லட்சம் டிக்கெட்டுகளை ரெயில்வே துறை ரத்து செய்கிறது. அந்த பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்ய தேவையில்லை, அவர்களின் வங்கி கணக்கிற்கு பணம் தானாக திருப்பி முழுமையாக அனுப்பப்படும் என ரெயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், தேதி குறிப்பிடும் வரை பயணிகள் யாரும் முன்பதிவு செய்ய வேண்டாம் எனவும் ரெயில்வே துறை தெரிவித்து உள்ளது